மதம் மாறுபவர்களின் சாதி இடஒதுக்கீடு மற்றும் சலுகைகள் குறித்து உச்ச நீதிமன்றம் இன்று ஒரு மிக முக்கியமான தீர்ப்பை வழங்கியுள்ளது. இந்து, சீக்கியம் மற்றும் பௌத்த மதங்களைத் தவிர வேறு மதங்களுக்கு மாறுபவர்கள், தங்களது பட்டியல் சாதி (SC) அந்தஸ்தைத் தொடர்ந்து வைத்திருக்க முடியாது என்று நீதிமன்றம் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.
ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த சிந்தாதா ஆனந்த் பால் என்பவர், தான் கிறிஸ்தவ மதத்திற்கு மாறிய பின்னரும் தனக்கு பட்டியல் சாதி பாதுகாப்பு மற்றும் உரிமைகள் வேண்டும் எனக் கோரி தொடர்ந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், இந்த அதிரடி முடிவை அறிவித்துள்ளனர்.
பத்தாண்டுகளுக்கும் மேலாகக் கிறிஸ்தவ தேவாலயத்தில் போதகராகப் பணியாற்றி வரும் ஒருவர், பட்டியல் சாதி சமூகத்தின் உறுப்பினராக இருக்க முடியாது என்ற ஆந்திர உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை உச்ச நீதிமன்றம் உறுதி செய்துள்ளது.
1950-ஆம் ஆண்டு சட்டப்பிரிவின்படி, மதம் மாறினால் சம்பந்தப்பட்ட நபர் பட்டியல் சாதி தகுதியை இழந்துவிடுவார் என்றும், அதன் மூலம் கிடைக்கும் இடஒதுக்கீடு, பாதுகாப்பு மற்றும் சட்டப்பூர்வ பலன்களைக் கோர முடியாது என்றும் நீதிபதிகள் தெளிவுபடுத்தியுள்ளனர். இந்தத் தீர்ப்பு நாடு முழுவதும் மதம் மாறியவர்கள் இடையே பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
