பாஜகவில் இணைந்து ஓராண்டுக்கு மேலாகியும் தனக்கும் தன் ஆதரவாளர்களுக்கும் உரிய அங்கீகாரம் வழங்கப்படாததால் நடிகர் சரத்குமார் கடும் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார். சென்னையில் நேற்று தனது ஆதரவாளர்களுடன் அவசர ஆலோசனைக் கூட்டத்தை நடத்திய அவர், தேசிய நீரோட்டத்தில் இணைந்த பிறகும் தமக்கு ஏன் இதுவரை எந்தப் பொறுப்பும் வழங்கப்படவில்லை என ஆவேசமாகக் கேள்வி எழுப்பினார்.

அண்ணாமலை மற்றும் நயினார் நாகேந்திரனிடம் பலமுறை கோரிக்கை வைத்தும் பலனில்லை என்றும், தனது பொறுமைக்கும் ஒரு எல்லை உண்டு என்றும் அவர் எச்சரித்துள்ளார்.குறிப்பாக, சமீபத்தில் நடைபெற்ற கட்சியின் பொதுக்கூட்ட மேடையில் தனது புகைப்படம் கூட இடம்பெறாதது தொண்டர்களிடையே பெரும் மனவேதனையை ஏற்படுத்தியுள்ளதாக அவர் வருத்தத்துடன் தெரிவித்தார்.

அரசியல் முடிவுகளுக்காக தனது மனைவி ராதிகாவிடம் ஆலோசனை கேட்பதைக் கிண்டலடிப்பவர்களை சரத்குமார் கடுமையாகச் சாடினார். ராதிகா மிகுந்த அறிவும், அரசியல் அனுபவமும் கொண்டவர் என்றும், தகுதியான அவரிடம் ஆலோசனை கேட்பதில் எந்தத் தவறும் இல்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.

தன்னைவிமர்சிப்பவர்களை ‘தற்குறிகள்’ என்று விமர்சித்த சரத்குமார், தேர்தல் நெருங்கும் வேளையில் எந்தப் பதவியும் இல்லாமல் தங்களால் எப்படிச் செயல்பட முடியும் எனத் தனது ஆதங்கத்தைப் பதிவு செய்தார்.