தமிழக அரசியலில் 2026 சட்டமன்றத் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், திமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீட்டில் ஏற்பட்ட இழுபறி காரணமாகத் தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன் கூட்டணியிலிருந்து வெளியேற முடிவெடுத்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

தங்களுக்குக் கூடுதல் இடங்கள் ஒதுக்கப்பட வேண்டும் மற்றும் வன்னியர் 10.5 சதவீத உள்ஒதுக்கீடு உள்ளிட்ட 10 அம்சக் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என வேல்முருகன் திமுகவிற்கு 24 மணி நேரக் கெடு விதித்திருந்தார். ஆனால், திமுக தரப்பிலிருந்து போதிய அங்கீகாரம் கிடைக்காததாலும், மீண்டும் ஒரு தொகுதியே ஒதுக்கப்படுவதாலும் அதிருப்தியடைந்த வேல்முருகன், இன்று (ஞாயிற்றுக்கிழமை) தனது இறுதி முடிவை அதிகாரப்பூர்வமாக அறிவிக்க உள்ளார்.

நீண்டகாலமாக திமுக கூட்டணியில் நீடித்த வேல்முருகன், தற்போது “இன்சல்ட்” செய்யப்பட்டதாகக் கருதுவதால், அடுத்தகட்டமாக அதிமுக அல்லது விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகத்துடன் கைகோர்க்க வாய்ப்புள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.