வாட்ஸ்அப் குழுக்கள் மூலம் பரப்பப்படும் தவறான தகவல்கள் மற்றும் தேர்தல் விதிமீறல்களைக் கட்டுப்படுத்த, இந்திய தேர்தல் ஆணையம் தற்போது அதிரடி கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. குறிப்பாக, தேர்தல் காலத்தில் குழுக்களில் பகிரப்படும் அவதூறு செய்திகள், வெறுப்புப் பேச்சுகள் மற்றும் போலிச் செய்திகளுக்கு அந்தக் குழுவின் நிர்வாகிகளே முழுப் பொறுப்பேற்க வேண்டும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.

மேலும் குழுவில் உள்ள யாரோ ஒருவர் பதிவிடும் ஆட்சேபனைக்குரிய கருத்தாக இருந்தாலும், அதை முறையாகக் கண்காணிக்கத் தவறிய நிர்வாகி மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும். எனவே, தேவையற்ற சர்ச்சைகளைத் தவிர்க்க, சந்தேகத்திற்குரிய செய்திகளை நீக்குவதோடு, குழுவின் அமைப்புகளை நிலைக்கு மாற்றுவது பாதுகாப்பானது என அறிவுறுத்தப்படுகிறது.

இதனால் தேர்தல் நேர்மையாகவும் அமைதியாகவும் நடைபெறுவதை உறுதி செய்ய, சமூக ஊடகங்களை தேர்தல் ஆணையம் தீவிரமாக கண்காணித்து வருகிறது. சமூகங்களுக்கு இடையே மோதலை உருவாக்கும் வகையிலோ அல்லது வேட்பாளர்களின் நற்பெயருக்குக் களங்கம் விளைவிக்கும் வகையிலோ செய்திகளைப் பரப்புவது தண்டனைக்குரிய குற்றமாகும்.

இந்நிலையில் ஒவ்வொரு மாவட்டத்திலும் இதற்கென அமைக்கப்பட்டுள்ள ஊடக சான்றிதழ் மற்றும் கண்காணிப்புக் குழுக்கள்  வாட்ஸ்அப் உள்ளிட்ட தளங்களில் பகிரப்படும் அரசியல் விளம்பரங்கள் மற்றும் தகவல்களைக் கண்காணிக்கும். விதிமீறல்கள் கண்டறியப்பட்டால், சம்பந்தப்பட்ட நபர் மற்றும் குழு நிர்வாகி மீது இந்திய தண்டனைச் சட்டம் மற்றும் தகவல் தொழில்நுட்பச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்படும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.