தமிழ் சினிமாவின் மாறுபட்ட சிந்தனையாளர் மற்றும் நடிகருமான பார்த்திபன், சமீபத்தில் ஜாதி தொடர்பான கருத்து ஒன்றைத் தெரிவித்ததாக எழுந்த சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாகத் தனது எக்ஸ் (X) தளத்தில் உருக்கமான மன்னிப்பு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “என்னை மன்னித்துவிடுங்கள்.. இத்தனை வருட அனுபவத்தில் இதுவே முதல்முறை நான் ஜாதிப் பெயரைக் குறிப்பிட்டுச் சொல்வது. அப்படி ஜாதியை தலைமேல் வைத்துக் கொண்டாடுபவர்களை எனக்கே பிடிக்காது” என்று அவர் மிகத்தெளிவாகக் குறிப்பிட்டுள்ளார். தனது ‘இவன்’ உள்ளிட்ட பல திரைப்படங்களில் ஜாதியைப் போற்றுபவர்களைத் தான் வன்மையாகக் கண்டித்துள்ளதை அவர் நினைவு கூர்ந்துள்ளார்.

​மேலும், தான் செய்த தவறை முழுமையாக உணர்ந்து வருந்துவதாகவும், இனி ஒருமுறை கூடத் தவறியும் இது போன்ற செயல்கள் நடக்காது என்றும் அவர் உறுதி அளித்துள்ளார். “அனைவரிடமும் மனப்பூர்வமாக மன்னிப்பைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என அவர் பதிவிட்டுள்ள இந்த அறிக்கை தற்போது இணையத்தில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. எப்போதுமே சமூகத்தின் மீதான அக்கறையுடன் பேசும் பார்த்திபன், தனது தவறை வெளிப்படையாக ஒப்புக்கொண்டு மன்னிப்பு கேட்டிருப்பது அவரது முதிர்ச்சியைக் காட்டுவதாகப் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.