ஆதித்யா தார் இயக்கத்தில் ரன்வீர் சிங், மாதவன் மற்றும் அக்ஷய் கண்ணா நடிப்பில் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்ற ‘துரந்தர்’ படத்தின் இரண்டாம் பாகமான ‘துரந்தர்: தி ரிவெஞ்ச்’ திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. இப்படத்தில் பிரதமர் நரேந்திர மோடி பதவியேற்பது மற்றும் அவர் மேற்கொண்ட அதிரடி நடவடிக்கையான பணமதிப்பிழப்பு தொடர்பான முக்கிய காட்சிகள் இடம்பெற்றுள்ளன.

மேலும் முதல் பாகம் உலகளவில் 1350 கோடி ரூபாய்க்கும் மேல் வசூலித்து சாதனை படைத்த நிலையில், அதன் தொடர்ச்சியாக வெளியாகியுள்ள இந்த இரண்டாம் பாகம் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, இந்தியாவில் கள்ளநோட்டு புழக்கம் அதிகரித்ததற்கும், பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்கும் இடையிலான காரணங்களை இந்தப் படம் விளக்குகிறது.

இந்நிலையில் பாகிஸ்தானிடம் இந்திய ரூபாய் நோட்டுகளை அச்சடிக்கும் அச்சுகள் கிடைத்ததாகவும், அதன் மூலம் பரப்பப்பட்ட கள்ளநோட்டுகளைத் தடுத்து நாட்டின் பொருளாதாரத்தைப் பாதுகாப்பதற்காகவே பிரதமர் மோடி இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க முடிவை எடுத்தார் என்பதும் படத்தில் காட்சிகளாக விவரிக்கப்பட்டுள்ளன. அரசியல் மற்றும் தேசப்பற்று பின்னணியில் உருவாகியுள்ள இத்திரைப்படம், சமூக வலைதளங்களில் தற்போது விவாதப் பொருளாக மாறியுள்ளது.