நமது ஊர்களில் பல வீடுகளின் முன்பாகவோ அல்லது கேட் பகுதிகளிலோ பிளாஸ்டிக் பாட்டில்களில் சிவப்பு அல்லது நீல நிறம் கலந்த நீர் நிரப்பப்பட்டு தொங்கவிடப்பட்டிருப்பதை நாம் பார்த்திருப்போம். இவ்வாறு செய்வதால் நாய்கள் அந்த இடத்திற்கு வராது, அசுத்தம் செய்யாது அல்லது பயந்து ஓடிவிடும் என்பது பலருடைய நம்பிக்கையாக உள்ளது. குறிப்பாக கிராமப்புறங்களில் இன்றும் இந்த நடைமுறை பரவலாகப் பின்பற்றப்படுகிறது.
ஆனால், இந்தச் செயலுக்குப் பின்னால் ஏதேனும் அறிவியல் உண்மை உள்ளதா? அல்லது இது வெறும் கண்மூடித்தனமான நம்பிக்கையா? என்பது குறித்து ஆய்வுகள் கூறுவது பற்றி பார்ப்போம்.
இந்த நம்பிக்கையைப் புரிந்து கொள்ள, முதலில் நாய்களின் பார்வைத் திறனைப் பற்றி அறிய வேண்டும். அறிவியல் ஆய்வுகளின்படி, நாய்கள் மனிதர்களைப் போல அனைத்து நிறங்களையும் தெளிவாகப் பார்க்கும் திறன் கொண்டவை அல்ல. அவை ஒரு வகையான நிறக்குருடு (Color Blind) தன்மை கொண்டவை. மனிதர்கள் பார்ப்பது போல நாய்களால் சிவப்பு அல்லது பச்சை நிறங்களை வேறுபடுத்திப் பார்க்க முடியாது.
நாய்களுக்கு உலகம் பெரும்பாலும் நீலம், மஞ்சள் மற்றும் சாம்பல் நிறங்களின் கலவையாகவே தெரிகிறது. எனவே, சிவப்பு அல்லது நீல நிற நீரைக் கண்டு நாய்கள் பயப்படும் என்பதற்கு எந்தவிதமான அறிவியல் ஆதாரமும் இல்லை.
நாய்கள் ஒரு இடத்தைப் பாதுகாப்பானதா அல்லது ஆபத்தானதா என்று தீர்மானிப்பது அதன் மோப்ப சக்தியை (Sense of Smell) வைத்தும், ஒலிகளைக் கேட்டும் தான். நிறங்களை விட வாசனைக்கே அவை அதிக முக்கியத்துவம் கொடுக்கின்றன.
“வண்ண நீர் நிரப்பப்பட்ட பாட்டில்கள் நாய்களை விரட்டும் என்ற கருத்துக்கு அறிவியல் ரீதியாக எவ்வித அடிப்படை ஆதாரமும் இல்லை. இது மக்களிடையே காலங்காலமாகப் பின்பற்றப்படும் ஒரு பொதுவான நம்பிக்கையே தவிர வேறொன்றுமில்லை” என்று நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
எனவே, நாய்களை விரட்ட இத்தகைய வண்ண பாட்டில்களைப் பயன்படுத்துவது எந்தப் பலனையும் தராது என்பதே நிதர்சனமான உண்மை.
