தொலைக்காட்சி செய்தி சேனல்கள் ஒரே காட்சிகளைத் திரும்பத் திரும்ப ஒளிபரப்பு செய்து மக்களைக் குழப்புவதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத் துறை அமைச்சகம் அதிரடி உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது. இது தொடர்பாகப் பேசிய அமைச்சக இணைச் செயலாளர் சி. செந்தில் ராஜன், செய்தி சேனல்கள் ஒரே மாதிரியான வீடியோக்களை மீண்டும் மீண்டும் பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். மேலும், திரையில் காட்டப்படும் காணொளிகளில் அது எடுக்கப்பட்ட ‘தேதி’ மற்றும் ‘நேரம்’ துல்லியமாக இடம்பெறுவதை உறுதி செய்ய வேண்டும் என்றும், இதன் மூலம் ஒளிபரப்பில் வெளிப்படைத்தன்மையைக் கொண்டு வர வேண்டும் என்றும் அவர் கட்டளையிட்டுள்ளார்.
முக்கியமாக, மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் போர்ச் சூழலை வைத்து செய்தி சேனல்கள் தேவையற்ற பரபரப்பை உருவாக்கி வருவதைக் கட்டுப்படுத்த அரசு இந்த அதிரடி நடவடிக்கையில் இறங்கியுள்ளது. டிஆர்பி (TRP) மதிப்பீட்டிற்காகப் பரபரப்பைத் தூண்டும் வகையில் செய்திகளை வெளியிடுவதைத் தவிர்க்க, ஏற்கனவே செய்தி சேனல்களுக்கான மதிப்பீடுகளை அரசு நிறுத்தி வைத்திருந்தது குறிப்பிடத்தக்கது. “மக்களை பயமுறுத்தாதீங்க, உண்மையைச் சொல்லுங்க” என்பது போல மத்திய அரசு கொடுத்துள்ள இந்த டோஸ், ஊடகத்துறையில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. இனி டிவி நியூஸ்ல நாம பார்க்குறது எல்லாமே கரெக்டா இருக்கும்னு நம்புவோம்!
