சத்தீஸ்கர் மாநிலம் பிலாசுப்பூர் மாவட்டத்தில் மகனின் பிறந்தநாள் விழா என்று கூறி வாலிபர் ஒருவரை வீட்டிற்கு அழைத்து ஆபாச வீடியோ எடுத்து மிரட்டிய பெண் குறித்த அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. நோஹர் குமார் சூர்யவன்ஷி என்ற 33 வயது மதிக்கத்தக்க டிராக்டர் ஓட்டுநர் அதே பகுதியைச் சேர்ந்த ஒரு பெண்ணுடன் பழக்கத்தில் இருந்துள்ளார்.

கடந்த பிப்ரவரி ஒன்றாம் தேதி தனது மகனின் பிறந்தநாள் விழா என்று கூறி அந்தப் பெண் நோஹரைத் தனது வீட்டிற்கு அழைத்துள்ளார். அங்கு சென்றபோது ஏற்கனவே மற்றொரு பெண் அங்கு இருந்துள்ளார். திட்டமிட்டபடி நோஹரை அந்தப் பெண்ணுடன் ஒரு அறைக்கு அனுப்பி வைத்த அந்தப் பெண் அங்கு ரகசியமாகத் தனது செல்போன் மூலம் அவர்களின் செயல்பாடுகளைப் படம்பிடித்துள்ளார்.

இந்தச் சம்பவத்திற்குப் பிறகு அந்த ஆபாச வீடியோவின் ஒரு பகுதியை நோஹருக்கு அனுப்பி வைத்த அந்தப் பெண் ஒரு லட்சம் ரூபாய் பணம் தர வேண்டும் இல்லையென்றால் வீடியோவை சமூக வலைதளங்களில் வெளியிட்டு விடுவேன் என்று மிரட்டியுள்ளார்.

இதனால் கடும் மன உளைச்சலுக்கு ஆளான அந்த வாலிபர் இது குறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்தப் புகாரின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர் டிஜிட்டல் ஆதாரங்கள் மற்றும் செல்போனைப் பறிமுதல் செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் இது போன்ற தேவையற்ற ஆசை வார்த்தைகளை நம்பி ஏமாற வேண்டாம் என்றும் சந்தேகத்திற்கு இடமான நபர்கள் குறித்து உடனடியாகத் தகவல் தெரிவிக்குமாறும் பொதுமக்களுக்குக் காவல்துறையினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.