நாக் அஸ்வின் இயக்கத்தில் பிரபாஸ் நடித்த ‘கல்கி 2898 ஏடி’ படத்தின் முதல் பாகம் உலகளவில் மாபெரும் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, அதன் இரண்டாம் பாகத்திற்கான படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. முதல் பாகத்தில் ‘சுப்ரீம் யாஸ்கின்’ என்ற மிரட்டலான வில்லன் கதாபாத்திரத்தில் சில நிமிடங்களே வந்து ரசிகர்களை வியப்பில் ஆழ்த்திய உலகநாயகன் கமல்ஹாசன், இரண்டாம் பாகத்தில் முழுநேர வில்லனாகத் திரையை ஆக்கிரமிக்க உள்ளார்.
மேலும் சமீபத்திய தகவல்களின்படி, இந்தப் படத்தில் சுமார் 14 நாட்கள் மட்டுமே நடிப்பதற்கு கமல்ஹாசனுக்கு சுமார் 150 கோடி ரூபாய் வரை சம்பளம் பேசப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. ஒரு நாளைக்குச் சுமார் 10 கோடி ரூபாய்க்கும் மேல் ஊதியம் வழங்கப்படுவதாக வெளிவந்துள்ள இந்தத் தகவல், திரையுலகினரையும் ரசிகர்களையும் பெரும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
இந்த பிரம்மாண்ட ஊதியம் குறித்த செய்தியைத் தொடர்ந்து, படத்தின் மீதான எதிர்பார்ப்பு பல மடங்கு அதிகரித்துள்ளது. நடிகர் யூகி சேது சமீபத்திய பேட்டி ஒன்றில், கமல் தான் இந்தியாவின் அதிக சம்பளம் வாங்கும் நடிகர் என்றும், ஒரு நாளைக்கு 2 மில்லியன் டாலர் வரை அவர் பெறுவதாகவும் குறிப்பிட்டுள்ளதை சினிமா வட்டாரங்கள் சுட்டிக்காட்டுகின்றன.
மேலும் முதல் பாகத்தில் தனது உடலமைப்பாலும் குரலாலும் ஒரு புதிய பரிமாணத்தைக் காட்டிய கமல், இரண்டாம் பாகத்தில் அமிதாப் பச்சன் மற்றும் பிரபாஸுடன் நேருக்கு நேர் மோதும் காட்சிகள் ரசிகர்களுக்கு விருந்தாக அமையும் என்பதில் சந்தேகமில்லை. இதற்கிடையில், இந்தப் படத்தில் தீபிகா படுகோனுக்குப் பதில் சாய் பல்லவி நடிக்கக்கூடும் என்ற வதந்திகளும் பரவி வரும் நிலையில், ‘கல்கி 2’ இந்திய சினிமாவின் மிக முக்கியமான மைல்கல்லாகப் பார்க்கப்படுகிறது.
