ஈரான் நாட்டின் அணுசக்தி மையங்கள் மற்றும் ராணுவத் தளங்களைக் குறிவைத்து இஸ்ரேல் மற்றும் அமெரிக்கப் படைகள் கடந்த மாதம் 28ம் தேதி அதிரடித் தாக்குதலை நடத்தின. இந்தத் தாக்குதலைத் தொடர்ந்து மத்திய கிழக்குப் பகுதியில் உள்ள அமெரிக்கப் படைத்தளங்கள் மற்றும் இஸ்ரேல் மீது ஈரான் பதில் தாக்குதல்களைத் தொடுத்து வருகிறது.
இதனால் அந்தப் பிராந்தியம் முழுவதும் போர் பதற்றம் அதிகரித்துள்ள நிலையில் அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுடன் நீண்டகாலப் போருக்குத் தயாராக இருப்பதாக ஈரான் தற்போது அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இது சர்வதேச அளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்து ஈரான் நாட்டின் இஸ்லாமியப் புரட்சிகரக் காவல்படை செய்தித் தொடர்பாளர் கூறுகையில் தங்கள் நாடு நீண்டகாலப் போரைச் சந்திக்கத் தயாராக இருப்பதாகத் தெரிவித்தார். அடுத்தகட்டமாகத் தாங்கள் நடத்தவிருக்கும் தாக்குதல் எதிரிகளுக்கு மிகுந்த வலிமிகுந்ததாக இருக்கும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.
இதுவரை எந்தவொரு மோதலிலும் பயன்படுத்தப்படாத ஈரானின் புதிய தொழில்நுட்பத்துடன் கூடிய நவீன ஆயுதங்கள் விரைவில் பயன்பாட்டிற்கு வரவுள்ளதாகவும் அந்தப் புதிய ஆயுதங்களை இனிவரும் காலங்களில் பயன்படுத்த உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். ஈரானின் இந்த அறிவிப்பால் மத்திய கிழக்கில் அமைதியற்ற சூழல் மேலும் தீவிரமடைந்துள்ளது.
