பீகார் மாநிலம் புர்னியா மாவட்டத்தில், 13 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரத்தில் அந்த சிறுமியின் 16 வயது காதலனை போலீசார் கைது செய்துள்ளனர்.
சம்பவத்தன்று பாதிக்கப்பட்ட சிறுமியிடம் அவரது தந்தை தேநீர் தயார் செய்யுமாறு கூறியுள்ளார். அதற்கு அந்தச் சிறுமி, “பத்து நிமிடத்தில் கழிவறைக்குச் சென்றுவிட்டு வந்து தேநீர் போடுகிறேன்” என்று கூறிவிட்டு வெளியே சென்றுள்ளார். ஆனால், அரை மணி நேரமாகியும் அவர் திரும்பாததால் அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் அவரைத் தேடத் தொடங்கினர்.
சிறுமியின் செல்போனை ஆய்வு செய்தபோது, அவருக்கு கரண் விஸ்வாஸ் என்ற 16 வயது சிறுவனிடமிருந்து அழைப்பு வந்தது தெரியவந்தது. உடனடியாக கிராம மக்கள் அந்தச் சிறுவனின் வீட்டுக்குச் சென்று தட்டிக் கேட்டனர். ஊர் மக்களின் நெருக்கடிக்கு உள்ளான கரண் விஸ்வாஸ், தான் செய்த குற்றத்தை ஒப்புக்கொண்டார்.
அவர் அளித்த தகவலின் பேரில், சிறுமியின் வீட்டிலிருந்து 500 மீட்டர் தொலைவில் உள்ள மூங்கில் தோப்பில், சிறுமியின் உடல் தூக்கில் தொங்கிய நிலையில் கண்டெடுக்கப்பட்டது.
போலீஸ் விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன. சிறுமியைப் பாலியல் வன்கொடுமை செய்த கரண், தனது குற்றம் வெளியே தெரிந்துவிடும் என்ற பயத்தில் சிறுமியின் கழுத்தை நெரித்துக் கொலை செய்துள்ளார். பின்னர், இது தற்கொலை என்று நம்பவைப்பதற்காக சடலத்தைக் கயிற்றால் கட்டி மரத்தில் தொங்கவிட்டுள்ளார்.
சிறுமியின் உடலில் காயங்களும், கழுத்தில் கருப்புத் தழும்புகளும் இருந்ததை போலீசார் உறுதி செய்துள்ளனர். தடய அறிவியல் நிபுணர்கள் சம்பவ இடத்திலிருந்து ஆதாரங்களைச் சேகரித்துள்ளனர்.
இந்த மனிதாபிமானமற்ற செயலுக்கு அரசியல் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். சுயேச்சை எம்.பி. பப்பு யாதவ் பாதிக்கப்பட்ட சிறுமியின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். குற்றவாளிக்குக் கடுமையான தண்டனை கிடைக்கவும், குடும்பத்தினருக்கு நீதி கிடைக்கவும் அனைத்து உதவிகளையும் செய்வதாக அவர் உறுதி அளித்தார்.
மேலும் தற்போது சிறுமியின் உடல் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது. இது தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
