குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள ஒரு மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் (ICU), சிகிச்சையில் இருந்த மூதாட்டி ஒருவர் இளம் மருத்துவரிடம் அவரது திருமணம் குறித்துக் கேட்ட சுவாரசியமான வீடியோ சமூக வலைதளங்களில் பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.

தீவிர சிகிச்சைப் பிரிவில் பல்வேறு மருத்துவ உபகரணங்களுக்கு மத்தியில் சிகிச்சை பெற்று வரும் அந்த மூதாட்டி, தனக்கு சிகிச்சை அளிக்க வந்த 26 வயது மருத்துவரிடம் அவரது தனிப்பட்ட வாழ்க்கை குறித்துப் பேசத் தொடங்கினார். அந்த வீடியோவில், “உனக்கு இன்னும் திருமணமாகவில்லையா?” என்று அந்தப் பெண் கேட்க, மருத்துவர் “இல்லை” என்று பதிலளிக்கிறார். உடனே அந்த மூதாட்டி, “இப்பொழுதே திருமணம் செய்துகொள்” என்று ஒரு பாட்டியின் உரிமையுடன் ஆலோசனை வழங்குகிறார்.

இந்த வீடியோவின் தலைப்பில் பகிரப்பட்டுள்ள தகவலின்படி, அந்த மூதாட்டிக்கு 15 வயதிலேயே திருமணமாகிவிட்டது. ஆனால், துரதிர்ஷ்டவசமாகத் தனது 25-வது வயதிலேயே அவர் விதவையானார். வலிகள் நிறைந்த அந்தச் சூழலிலும், அடுத்த தலைமுறை நன்றாக இருக்க வேண்டும் என்ற அக்கறையிலேயே அவர் இவ்வாறு கேட்டதாகக் கூறப்படுகிறது. இந்த வீடியோ இதுவரை 2 லட்சத்திற்கும் அதிகமான பார்வைகளைப் பெற்றுள்ளது.

 

View this post on Instagram

 

A post shared by Dr. vaishnavi (@drwithavibe)


இந்த வீடியோவைப் பார்த்த நெட்டிசன்கள் பல்வேறு கருத்துகளைப் பகிர்ந்து வருகின்றனர், வயதானவர்களின் ஒரே குறிக்கோள் அனைவருக்கும் திருமணம் செய்து வைப்பதுதான் போல” என்று ஒருவர் கிண்டலாகப் பதிவிட்டுள்ளார்.

“பழைய தலைமுறையினருக்குத் திருமணம் என்பதுதான் வாழ்க்கையின் மிக முக்கியமான விஷயமாகப் பார்க்கப்பட்டது” என்று மற்றொருவர் குறிப்பிட்டுள்ளார்.

வேறொரு மருத்துவர் கூறுகையில், “எங்களிடமும் வயதான நோயாளிகள் முதலில் கேட்கும் கேள்வி இதுதான்” எனத் தனது அனுபவத்தைப் பகிர்ந்துள்ளார்.

மேலும் முதுமையின் அனுபவமும், இளமையின் துடிப்பும் மோதிக்கொள்ளும் இந்தத் தருணம், சமூக வலைதளங்களில் பலரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.