உத்தரப் பிரதேச மாநிலம் ஷாஜகான்பூரில் ஹோலி பண்டிகை தினத்தன்று, மனைவியைக் கழுத்தை அறுத்துக் கொலை செய்துவிட்டு, அவரது காதலன் மீது ஆசிட் வீசிய கணவனின் செயல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஷாஜகான்பூர் சௌக் கோட்வாலி பகுதியில் உள்ள பாலாஜி நகர் காலனியில் ஆர்த்தி (31) என்பவர் தனது காதலன் பிரிஜ்தீப் என்பவருடன் வசித்து வந்தார். புதன்கிழமை அதிகாலை சுமார் 6 மணியளவில், ஆர்த்தியின் கணவர் மன்மோகன் பாண்டே முகமூடி அணிந்து அந்த வீட்டிற்கு வந்துள்ளார். கதவைத் தட்டிய மன்மோகன், பிரிஜ்தீப் கதவைத் திறந்தவுடன் உள்ளே புகுந்துள்ளார்.

முதலில் பிரிஜ்தீப் மீது ‘குலால்’ பொடியைத் தூவிய மன்மோகன், மறைத்து வைத்திருந்த ஆசிட்டை அவர் மீது வீசியுள்ளார். பிரிஜ்தீப்பின் அலறல் சத்தம் கேட்டு வெளியே வந்த ஆர்த்தி, மன்மோகனை செங்கல்லால் தாக்கித் தடுக்க முயன்றுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த மன்மோகன், ஆர்த்தியைத் துரத்திச் சென்று கூர்மையான ஆயுதத்தால் அவரது கழுத்தை அறுத்துக் கொலை செய்தார். ஆர்த்தி சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் உயிரிழந்தார்.

ஆசிட் வீச்சால் படுகாயமடைந்த நிலையிலும், பிரிஜ்தீப் மன்மோகனைத் திருப்பித் தாக்கியுள்ளார். இதில் மன்மோகனும் பலத்த காயமடைந்தார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், காயமடைந்த இருவரையும் மீட்டு அரசு மருத்துவக் கல்லூரியில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

ஆர்த்திக்கும் மன்மோகனுக்கும் 10 ஆண்டுகளுக்கு முன்பு திருமணமாகி, 7 வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது. கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்து வாழ்ந்து வந்த நிலையில், விவாகரத்து வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இதற்கிடையே, டேட்டா என்ட்ரி ஆபரேட்டராகப் பணியாற்றிய ஆர்த்திக்கும், அவரது மேலதிகாரி பிரிஜ்தீப்பிற்கும் காதல் மலர்ந்துள்ளது. இருவரும் விரைவில் திருமணம் செய்யத் திட்டமிட்டிருந்ததே இந்தக் கொலைக்குக் காரணம் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

மேலும் குழந்தையின் கண் முன்னாலேயே தாய் கொல்லப்பட்ட இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.