தமிழக அரசியல் சூழல் குறித்து பிக்பாஸ் புகழ் ஜுலி பேசிய கருத்துக்கள், தற்போது சமூக வலைதளங்களில் பெரும் விவாதப் பொருளாக மாறியுள்ளன.
சென்னையில் அண்மையில் நடைபெற்ற ‘வெல்லும் தமிழ் பெண்கள்’ என்ற நிகழ்ச்சியில் நடிகை ஜுலி கலந்துகொண்டு பேசினார். அப்போது தமிழக அரசியலில் திரைத்துறையினரின் வருகை குறித்தும், தற்போதைய அரசியல் களம் குறித்தும் தனது கருத்துக்களை ஆவேசமாகப் பதிவு செய்தார்.
நிகழ்ச்சியில் ஜுலி பேசியதாவது, எனக்கு ‘தளபதி’ என்றால் அது முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மட்டும்தான். இப்போது நிறைய திரைத் தளபதிகள் அரசியலுக்கு வந்துகொண்டிருக்கிறார்கள். ஓட்டுகளைப் பிரித்து, உள்ளே வந்து ஆட்டையைப் போடலாம் என்று சிலர் நினைக்கிறார்கள்.
“என்னைக்கும் தளபதி மு.க.ஸ்டாலின் தான்.. நிறைய திரைத் தளபதிகள் எல்லாம் இருக்காங்க.. ஓட்டை பிரிச்சி உள்ளே வந்து ஆட்டையை போட்டுறலாம்னு நினைக்குறாங்க.. இது தமிழ்நாடு.. திராவிட கோட்டை.. எந்த ஸ்டார் கடப்பாரையை வச்சும் ஒண்ணும் பண்ண முடியாது..” – வெல்லும் தமிழ் பெண்கள் நிகழ்ச்சியில்… pic.twitter.com/y0goyC7yTf
— Polimer News (@polimernews) March 5, 2026
ஆனால், இது தமிழ்நாடு; இது ஒரு திராவிடக் கோட்டை. இங்கே எந்த ‘ஸ்டார்’ கடப்பாரையை வைத்தாலும் ஒன்றும் செய்ய முடியாது என்றார். ஜுலியின் இந்த பேச்சு, தமிழக வெற்றிக் கழகத் தலைவர் நடிகர் விஜய்யை மறைமுகமாகக் குறிப்பிடுவதாக அரசியல் வட்டாரங்களில் கருதப்படுகிறது.
நடிகர் விஜய் தனது அரசியல் பயணத்தைத் தொடங்கியுள்ள நிலையில், ஜுலியின் “திரைத் தளபதிகள்” குறித்த விமர்சனம் விஜய் ரசிகர்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. சமூக வலைதளங்களில் இதற்கு ஆதரவாகவும், எதிர்ப்பாகவும் கருத்துக்கள் பகிரப்பட்டு வருகின்றன.
“ஜுலி தனது அரசியல் நிலைப்பாட்டை வெளிப்படுத்தியுள்ளார்” என ஒரு தரப்பினர் ஆதரவு தெரிவிக்க, விஜய் ரசிகர்களோ “திரைத்துறையினர் அரசியலுக்கு வரக்கூடாதா?” என கேள்வி எழுப்பி வருகின்றனர்.
மேலும் எம்.ஜி.ஆர், ஜெயலலிதா போன்ற ஆளுமைகள் திரைத்துறையிலிருந்து வந்து அரசியலில் தடம் பதித்த வரலாறு தமிழகத்திற்கு உண்டு. அந்த வரிசையில் தற்போது விஜய்யின் வருகை புதிய விவாதங்களை உருவாக்கியுள்ள நிலையில், ஜுலியின் இந்த ‘திராவிடக் கோட்டை’ முழக்கம் அரசியல் களத்தில் கூடுதல் சூட்டை கிளப்பியுள்ளது.
