தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், ஒரு கைதேர்ந்த நடிகராக ஸ்கிரிப்ட் எழுதி வைத்துப் பேசுகிறார் என்றும், அவருக்குத் துணிச்சல் இருந்தால் செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்றும் அதிமுக முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் சவால் விடுத்துள்ளார். சென்னையில் நடைபெற்ற அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறியதாவது,
“தஞ்சாவூர் கூட்டத்தில் விஜய் பேசியது முற்றிலும் எழுதி கொடுக்கப்பட்ட ஒரு நாடகம். ஒரு ஸ்கிரிப்ட்டை மனப்பாடம் செய்து பேசுவது மிக எளிது. விஜய் ஒரு கைதேர்ந்த நடிகர் என்பதால், எந்தப் பேச்சிற்கு எப்படி உடல்மொழியை வெளிப்படுத்த வேண்டும் என்பது அவருக்குச் சொல்லித்தர வேண்டியதில்லை.
விஜய்க்கு உண்மையிலேயே தில்லும், திராணியும் இருந்தால் எங்களைப் போல செய்தியாளர்களை நேருக்கு நேர் சந்திக்க வேண்டும். அதைச் செய்ய அவருக்குத் துணிவில்லை. ஆனால், தனக்கு மட்டுமே தைரியம் இருப்பது போலப் பேப்பரில் எழுதி வைத்திருப்பதைப் பேசுகிறார். இதற்கு ஆதவ் அர்ஜுனா, அருண்ராஜ் போன்றவர்கள்தான் இயக்குநர்களாகச் செயல்படுகிறார்கள்.
விஜய் தனது கட்சிக் கொள்கையில் ‘ஆட்சியில் பங்கு, அதிகாரத்தில் பங்கு’ என்று அறிவித்தார். அப்படி அவர் அழைப்பு விடுத்தும், ஒரு கட்சிக் கூட அவரோடு கூட்டணி வைக்கச் செல்லவில்லை. இதனால் விரக்தியடைந்த விஜய், இப்போது அதிமுகவை வம்புக்கு இழுக்கத் தொடங்கியுள்ளார். அதிமுகவை வம்பிழுத்தால் விஜய் பலமாக வாங்கிக் கட்டிக்கொள்ள நேரிடும்.”
மேலும் திமுக மற்றும் அதிமுக இடையே ரகசிய ஒப்பந்தம் இருப்பதாக விஜய் கூறிய குற்றச்சாட்டை முற்றிலுமாக மறுத்த ஜெயக்குமார், விஜய்யின் அரசியல் முதிர்ச்சியற்ற பேச்சுக்களை மக்கள் கவனித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள் எனத் தெரிவித்தார்.
