லண்டன் நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள பேங்க் ஆப் இங்கிலாந்து வங்கியின் தரைத்தளத்தில் உலகையே வியக்க வைக்கும் பிரம்மாண்டமான தங்கச் சுரங்கம் போன்ற பாதுகாப்பு பெட்டகம் அமைந்துள்ளது. இந்த நிலத்தடி பகுதி எவ்வளவு பெரியது என்றால் லண்டன் நகரின் மெட்ரோ ரயில் சுரங்கப்பாதை இந்த வங்கியின் பாதுகாப்பு கருதி நேராகச் செல்லாமல் வளைந்து செல்லும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.
ஐரோப்பாவின் மிகப்பெரிய தங்கக் களஞ்சியமான இங்கு சுமார் அறுபதுக்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த ஐயந்தாயிரம் டன் தங்கம் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது. இங்குள்ள ஒவ்வொரு தங்கக் கட்டியும் சுமார் பன்னிரண்டு முதல் பதிமூன்று கிலோ எடை கொண்டவை என்பதால் அவற்றை கையாள்வதற்கு தனிப்பட்ட கவனம் செலுத்தப்படுகிறது.
இந்த வங்கியில் உள்ள மொத்த தங்கமும் இங்கிலாந்து நாட்டிற்குச் சொந்தமானது அல்ல என்பதும் இதில் பெரும்பாலானவை மற்ற நாடுகளின் சேமிப்பு என்பதும் குறிப்பிடத்தக்கது. இங்கிலாந்து அரசுக்குச் சொந்தமாக சுமார் முந்நூறு டன் தங்கம் மட்டுமே இங்கு உள்ளது.
கடந்த 1990களின் இறுதியில் இங்கிலாந்தின் அப்போதைய நிதியமைச்சர் கோர்டன் பிரவுன் நாட்டின் பாதியளவு தங்கத்தை குறைந்த விலைக்கு விற்றதால் தற்போது அந்த நாட்டிற்கு சுமார் நான்கு லட்சம் கோடி ரூபாய்க்கும் மேல் இழப்பு ஏற்பட்டுள்ளதாகக் கருதப்படுகிறது. தங்கம் வெறும் முதலீடு மட்டுமல்லாமல் ஒரு நாட்டின் பொருளாதார பலத்தின் அடையாளமாகத் திகழ்வதை இந்த வங்கி இன்றும் உலகிற்கு உணர்த்தி வருகிறது.
