தமிழக வெற்றிக் கழகத் தலைவரும் நடிகருமான விஜய் மற்றும் அவரது மனைவி சங்கீதா இடையிலான விவாகரத்து விவகாரம் தமிழக அரசியலிலும் திரையுலகிலும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சூழலில், அவர்களது மகன் ஜேசன் சஞ்சய் எடுத்துள்ள ஒரு முடிவு குடும்பத்திற்குள் இருக்கும் விரிசலை வெளிச்சத்திற்கு கொண்டு வந்துள்ளது.

தனது முதல் திரைப்படத்தை இயக்கத் தயாராகி வரும் ஜேசன் சஞ்சய், இன்ஸ்டாகிராமில் தனது தந்தை விஜய்யை பின்தொடர்வதை (Unfollow) நிறுத்தியுள்ளார். விஜய்யின் அரசியல் மற்றும் சினிமா வாழ்க்கையில் அடுத்தடுத்த திருப்பங்கள் ஏற்பட்டு வரும் வேளையில், மகன் எடுத்துள்ள இந்த முடிவு அவர் தனது தாய் சங்கீதாவிற்கு ஆதரவாக இருப்பதை உறுதிப்படுத்துவதாகப் பார்க்கப்படுகிறது. சங்கீதா தாக்கல் செய்துள்ளதாகக் கூறப்படும் மனுவில், கடந்த 2021-ம் ஆண்டு முதல் விஜய்க்கும் ஒரு முன்னணி நடிகைக்கும் இடையே இருந்த தொடர்புதான் இந்தப் பிரிவுக்கு முக்கியக் காரணம் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதன்பிறகு பலமுறை எச்சரித்தும் விஜய் அந்தத் தொடர்பைத் தொடர்ந்ததாகவும், இதனால் தனக்கு மன உளைச்சலும், பிள்ளைகளுக்குப் பொதுவெளியில் தர்மசங்கடமும் ஏற்பட்டதாக சங்கீதா குற்றம் சாட்டியுள்ளார். பரஸ்பர விவாகரத்து கோரியும் விஜய் அதற்கு ஒத்துழைக்காததால், தற்போது நீதிமன்றத்தை நாடியுள்ளதாகத் தெரிகிறது.

விஜய்யின் தனிப்பட்ட வாழ்க்கை குறித்து வரும் செய்திகளால் அதிருப்தி அடைந்த ஒரு தரப்பு ரசிகர்கள், ஜேசன் சஞ்சய்யை சமூக வலைதளங்களில் கடுமையாக விமர்சித்து வந்தனர். “தந்தைக்கு ஆதரவாக நிற்காமல் மௌனம் காப்பது ஏன்?” என அவர்கள் கேள்வி எழுப்பினர். இதற்குப் பதிலடி கொடுக்கும் விதமாகவே, விஜய்யை ‘அன்ஃபாலோ’ செய்து தனது எதிர்ப்பை சஞ்சய் வெளிப்படுத்தியிருப்பதாகத் திரையுலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ஏற்கனவே ஜேசன் சஞ்சய் தனது தந்தையின் வீட்டில் இருந்து வெளியேறி, சென்னையில் தனி வீட்டில் வசித்து வருவதாகக் கூறப்படுகிறது. சஞ்சய்யின் முதல் பட அறிவிப்பின் போது கூட விஜய் அது குறித்து எந்த வாழ்த்தோ, கருத்தோ தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் தற்போது விவாகரத்து வழக்கு நீதிமன்றத்திற்கு வந்துள்ள நிலையில், ஒட்டுமொத்த குடும்பமே இரண்டாகப் பிரிந்து நிற்பது ரசிகர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.