மதிமுக பொதுச்செயலாளர் வைகோவின் உறவினர் கார்த்திகேயன் பாரதிய ஜனதா கட்சியில் இணைந்திருப்பது தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நெல்லையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், பாஜக சட்டமன்ற குழுத் தலைவர் நயினார் நாகேந்திரன் முன்னிலையில் கார்த்திகேயன் தன்னை முறைப்படி கட்சியில் இணைத்துக் கொண்டார்.

மேலும் வைகோவின் நெருங்கிய உறவினர் ஒருவரே மாற்றுக் கட்சியில், அதுவும் கொள்கை ரீதியாக மாறுபட்ட பாஜகவில் இணைந்தது அக்கட்சித் தொண்டர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த இணைவின் போது பேசிய கார்த்திகேயன், பிரதமர் நரேந்திர மோடியின் தலைமைப் பண்பு மற்றும் அவரது மக்கள் நலத்திட்டங்களால் ஈர்க்கப்பட்டே தாம் இந்த முடிவை எடுத்ததாகத் தெரிவித்தார்.

இந்நிலையில் வைகோவின் குடும்பத்தைச் சேர்ந்த ஒருவரே பாஜகவில் இணைந்திருப்பது, தென் மாவட்டங்களில் அக்கட்சிக்கு கூடுதல் பலத்தை சேர்க்கும் என பாஜகவினர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். அதே சமயம், இது வைகோவின் அரசியல் பயணத்தில் எந்தவித தாக்கத்தையும் ஏற்படுத்தாது என மதிமுக தரப்பினர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.