தமிழக வெற்றிக் கழகத்தின் மதுரை தெற்கு மாவட்டச் செயலாளர் மீது பெண் நிர்வாகி ஒருவர் ரூ.16 லட்சம் மோசடிப் புகார் கூறி தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அக்கட்சியினரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை திருநகரைச் சேர்ந்த சர்மிளா என்பவர், தவெக-வின் மாவட்ட மகளிர் அணி அமைப்பாளராகப் பணியாற்றி வந்த நிலையில், அளவுக்கு அதிகமான மாத்திரைகளை உட்கொண்டு தற்கொலைக்கு முயன்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மயக்கமடைவதற்கு முன் அவர் வெளியிட்ட வீடியோவில், “வசதியானவர்களைக் கட்சியில் சேர்த்தால்தான் வளர முடியும் எனக் கூறி மாவட்டச் செயலாளர் தங்கபாண்டி என்னிடம் ரூ.16 லட்சம் வசூலித்தார்; ஐடி நிறுவனத்தில் முதலீடு செய்தால் வட்டி தருவதாகக் கூறி வாங்கிய அந்தப் பணத்தைத் திருப்பித் தராமல் ஏமாற்றியதால் மன உளைச்சலில் இந்த முடிவை எடுக்கிறேன்” என உருக்கமாகத் தெரிவித்துள்ளார்.

தவெக தலைவர் விஜய் கட்சியை வலுப்படுத்தத் தீவிரமாகச் செயல்பட்டு வரும் நிலையில், மாவட்ட அளவிலான நிர்வாகிகள் மீது எழுந்துள்ள இந்த மோசடிப் புகார் அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.