தேர்வு மற்றும் எதிர்காலம் குறித்த அதீத அழுத்தம் ஒரு இளைஞனை எந்த எல்லைக்குக் கொண்டு செல்லும் என்பதற்கு சாட்சியாக, லக்னோவில் தந்தையைத் துப்பாக்கியால் சுட்டுக்கொன்று, அவரது உடலைத் துண்டு துண்டாக வெட்டி வீசிய மகனைப் போலீஸார் கைது செய்துள்ளனர்.
லக்னோவின் ஆஷியானா பகுதியில் கடந்த பிப்ரவரி 20-ஆம் தேதி இந்த பயங்கரச் சம்பவம் நிகழ்ந்துள்ளது. மருத்துவர் மற்றும் மதுபான வணிகரான மன்வேந்திர சிங் என்பவருக்கும், அவரது 19 வயது மகன் அக்ஷத் பிரதாப் சிங்கிற்கும் இடையே படிப்பு மற்றும் நீட் (NEET) தேர்வு தயாரிப்பு தொடர்பாக அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. சம்பவத்தன்று ஏற்பட்ட கடும் வாக்குவாதத்தில், ஆத்திரமடைந்த அக்ஷத் தனது தந்தையின் உரிமம் பெற்ற துப்பாக்கியால் அவரைச் சுட்டுக் கொன்றுள்ளார்.
கொலைக்குப் பிறகு ஆதாரங்களை மறைக்க அக்ஷத் செய்த காரியங்கள் போலீஸாரையே அதிரவைத்துள்ளன. தந்தையின் உடலை தலை, கைகள், கால்கள் எனப் பல துண்டுகளாக வெட்டியுள்ளார். உடல் பகுதியை மட்டும் ஒரு பையில் அடைத்து நீல நிற பேரலில் மறைத்து வைத்துள்ளார். மற்ற பாகங்களை ஆள் நடமாட்டம் இல்லாத பகுதியில் வீசியுள்ளார். மேலும், 10 லிட்டர் மண்ணெண்ணெய் வாங்கி வந்து எஞ்சிய உடல் பாகங்களை எரிக்கவும் அவர் திட்டமிட்டிருந்தது விசாரணையில் தெரியவந்துள்ளது.
தந்தை காணாமல் போய்விட்டதாகக் கூறி டெல்லிக்குச் சென்றிருப்பதாக நாடகமாடிய அக்ஷத், போலீஸாரிடம் புகார் அளித்துள்ளார். ஆனால், அவரது முன்னுக்குப் பின் முரணான பதில்களால் சந்தேகமடைந்த போலீஸார் தீவிர விசாரணை நடத்தியதில் அவர் உண்மையை ஒப்புக்கொண்டார். இச்சம்பவம் நடந்தபோது அவரது சகோதரியும் அங்கிருந்ததாகவும், அவருக்கு கொலை மிரட்டல் விடுத்து அக்ஷத் மௌனமாக்கியதாகவும் கூறப்படுகிறது.
இந்தச் சம்பவம் குறித்துப் பேசியுள்ள மனநல மருத்துவர்கள், “பொதுவாகத் தேர்வு அழுத்தம் என்பது மாணவர்களிடையே கவலை மற்றும் தற்கொலை எண்ணங்களையே உருவாக்கும். ஆனால், மிக அரிதாக சில சூழல்களில், கட்டுப்படுத்த முடியாத கோபம் மற்றும் ஆதரவற்ற உணர்வு இதுபோன்ற வன்முறைச் செயல்களுக்கு வழிவகுக்கும்” எனத் தெரிவித்துள்ளனர்.
பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளின் மீது எதார்த்தத்திற்குப் புறம்பான எதிர்பார்ப்புகளைத் திணிக்காமல், அவர்களுடன் மனம் விட்டுப் பேசுவதும், மன அழுத்த அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக மருத்துவ ஆலோசனை பெறுவதும் இதுபோன்ற விபரீதங்களைத் தவிர்க்க உதவும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
