பெங்களூருவில் உள்ள முன்னணி ஐடி நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வந்த ரஞ்சிதா, தனது நண்பரின் நிச்சயதார்த்த விழாவிற்காக சிக்மகளூருக்கு மிகுந்த உற்சாகத்துடன் சென்றுள்ளார்.

அங்குள்ள தனியார் விடுதி ஒன்றில் தங்கியிருந்தபோது, குளிக்கச் சென்ற ரஞ்சிதா நீண்ட நேரமாகியும் வெளியே வரவில்லை. இதனால் சந்தேகமடைந்த நண்பர்கள், கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது அவர் மயங்கிய நிலையில் கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியிலேயே அந்த இளம்பெண்ணின் உயிர் பிரிந்தது. தொடக்கத்தில் இது மர்ம மரணமாகக் கருதப்பட்ட நிலையில், பிரேதப் பரிசோதனை அறிக்கையில் வெளியான உண்மை ஒட்டுமொத்தத் தமிழகத்தையும், கர்நாடகாவையும் அதிர வைத்துள்ளது.

ரஞ்சிதாவின் மரணத்திற்குக் காரணம் குளியலறையில் பொருத்தப்பட்டிருந்த வாட்டர் ஹீட்டர்தான் என்பது தற்போது உறுதியாகியுள்ளது. அந்த ஹீட்டரிலிருந்து கசிந்த ‘கார்பன் மோனாக்சைடு’ (Carbon Monoxide) என்ற விஷவாயு, போதிய காற்றோட்டம் இல்லாத குளியலறையில் பரவியுள்ளது.

அதை சுவாசித்த ரஞ்சிதா, சில நிமிடங்களிலேயே மூச்சுத் திணறி மயங்கி மரணமடைந்துள்ளார். விடுதி நிர்வாகத்தின் அலட்சியமே ஒரு இளம் உயிரைப் பறித்துள்ளதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. பாதுகாப்புக் குறைபாடுகளுடன் ஹீட்டரை நிறுவிய விடுதி உரிமையாளர் சுதாகர் மீது ஆல்டூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, அவரை அதிரடியாகக் கைது செய்துள்ளனர். ஒரு சாதாரண குளியல், மரணக் குளியலாக மாறிய இந்தச் சம்பவம் விடுதிகளில் தங்கும் பயணிகளிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.