குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்று வரும் நெதர்லாந்துக்கு எதிரான டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணியின் தொடக்க வீரர் அபிஷேக் சர்மா மீண்டும் ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்து ரசிகர்களுக்குப் பெரும் ஏமாற்றத்தை அளித்துள்ளார்.
இந்தப் போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரராகக் களமிறங்கிய அவர் நெதர்லாந்து சுழற்பந்து வீச்சாளர் ஆர்யன் தத் வீசிய ஓவரில் கிளீன் போல்டாகி வெளியேறினார்.
நடப்பு உலகக்கோப்பையில் தான் விளையாடிய அமெரிக்கா மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகளுக்கு எதிரான போட்டிகளிலும் டக் அவுட் ஆகியிருந்த நிலையில் தற்போது மூன்றாவது முறையாகவும் ஒரு ரன் கூட எடுக்காமல் அவர் ஆட்டமிழந்துள்ளார்.
அபிஷேக் சர்மாவின் அதிரடி ஆட்டமே அவருக்குப் பலவீனமாக மாறியுள்ளதாக கிரிக்கெட் விமர்சகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். களமிறங்கிய முதல் பந்திலிருந்தே அதிரடியாக விளையாட வேண்டும் என்ற முனைப்பில் பந்தின் தன்மையையும் மைதானத்தின் சூழலையும் கணிக்கத் தவறுவதே அவரது விக்கெட் இழப்பிற்குக் காரணமாக அமைகிறது.
குறிப்பாக எதிரணிகள் அவரது இந்த அவசர கதியைப் புரிந்து கொண்டு தொடக்கத்திலேயே சுழற்பந்து வீச்சாளர்களைப் பயன்படுத்தி அவரது விக்கெட்டை வீழ்த்தி வருகின்றன. முக்கியமான சூப்பர் 8 சுற்றுப் போட்டிகள் தொடங்க உள்ள நிலையில் இளம் வீரரான அபிஷேக் சர்மா தனது பொறுப்பை உணர்ந்து விவேகத்துடன் விளையாட வேண்டும் என்பதே ரசிகர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
