திருப்பூர் மாவட்டம் காங்கேயம் போக்குவரத்து பணிமனையில் இருந்து இயக்கப்படும் நகரப் பேருந்தில், இலவசப் பயணச் சீட்டு கேட்ட பெண் பயணிகளிடம் ஓட்டுநரும் நடத்துநரும் அநாகரீகமாக நடந்துகொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

காங்கேயம் பேருந்து நிறுத்தத்தில் இருந்து ஏறிய பெண்கள் சிலர், அடுத்த நிறுத்தத்தில் இறங்க வேண்டும் எனக் கூறி பயணச் சீட்டு கேட்டுள்ளனர். அதற்கு அந்தப் பேருந்தின் ஊழியர்கள், இரண்டு நிறுத்தங்களுக்கு ஏன் நடந்து செல்லக் கூடாது எனக் கேள்வி எழுப்பியதுடன், பெண்களுக்குப் பயணச் சீட்டு வழங்க மறுத்து அவர்களை மிரட்டும் வகையில் பேசியுள்ளனர்.

மேலும் அபராதம் கட்டினால் தான் நீங்கள் திருந்துவீர்கள் எனக் கூறி, அந்தப் பெண்களை அவர்கள் இறங்க வேண்டிய இடத்தில் இறக்கிவிடாமல் நேரடியாகப் பேருந்து நிலையத்திற்கு அழைத்துச் சென்றுள்ளனர். இந்தச் சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவியதைத் தொடர்ந்து, பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் அந்தப் பேருந்து ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தினர்.

தமிழக அரசு விடியல் பேருந்து திட்டத்தின் கீழ் பெண்கள் இலவசமாகப் பயணம் செய்யலாம் என அறிவித்துள்ள நிலையில், அரசு ஊழியர்களே பெண்களை இழிவாகப் பேசியது வேதனையை ஏற்படுத்தியுள்ளதாகப் புகார்கள் எழுந்தன.

இது குறித்து விசாரணை நடத்திய திருப்பூர் அரசுப் போக்குவரத்துக் கழக அதிகாரிகள், முதற்கட்ட நடவடிக்கையாக அந்த ஓட்டுநர் மற்றும் நடத்துநரைத் தற்காலிகப் பணிநீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளனர். மேலும் இந்தச் சம்பவம் குறித்து விரிவான விளக்கம் அளிக்குமாறும் அவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.