இந்தியத் திருமணங்கள் என்றாலே ஆடம்பரத்திற்குப் பஞ்சமிருக்காது. ஆனால், பஞ்சாப் மாநிலத்தில் ஒரு திருமண விழாவில் மணமக்கள் மீது கோடிக்கணக்கான ரூபாய் நோட்டுகள் மழையாகப் பொழியப்பட்ட சம்பவம், இணையதளங்களில் விவாதப் பொருளாக மாறியுள்ளது.
சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் அந்த வீடியோவில், மணமேடையில் நின்றிருக்கும் மணமக்கள் மீது கட்டுக்கட்டாகப் பணத்தை வாரி இறைக்கின்றனர் உறவினர்கள். சுமார் ரூ. 8.5 கோடி மதிப்பிலான ரூபாய் நோட்டுகள் இவ்வாறு இறைக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தால் உருவாக்கப்பட்ட வீடியோவோ என்று சந்தேகிக்கும் அளவிற்கு, அந்த மேடையே பணத்தால் நிறைந்திருந்தது.
இந்த வீடியோவைப் பார்த்த பலரும் அதிர்ச்சியும் வேதனையும் தெரிவித்துள்ளனர்: இவ்வளவு பணத்தை வீணாக்குவதற்குப் பதில், ஏழை மாணவர்களின் கல்விக்கோ அல்லது வீடற்றவர்களுக்கு வீடு கட்டிக்கொடுக்கவோ பயன்படுத்தியிருக்கலாம். அன்பைக் காட்டப் பல வழிகள் உள்ளன” என ஒரு பயனர் பதிவிட்டுள்ளார்.
அடிப்படைத் தேவைகளுக்கே மக்கள் கஷ்டப்படும் நாட்டில், இது போன்ற பகட்டுத் தனங்கள் தேவையற்றவை” எனப் பலர் சாடியுள்ளனர். இது உண்மையாகவே 8.5 கோடி ரூபாயாக இருந்தால், இந்நேரம் வருமான வரித்துறை அதிகாரிகள் அந்தத் திருமணத்தில் ஆஜராகியிருப்பார்கள்” எனச் சிலர் கிண்டலாகவும், சந்தேகத்துடனும் பதிவிட்டுள்ளனர்.
மேலும் தொழில்நுட்பம் வளர்ந்த வேகத்தில் மனிதர்களின் மனநிலை மாறவில்லையோ என்ற கேள்வியை இந்த வீடியோ எழுப்பியுள்ளது. மகிழ்ச்சியைக் கொண்டாடப் பணத்தை இறைப்பதா அல்லது தேவையுள்ளவர்களுக்கு உதவுவதா என்ற விவாதம் தற்போது இணையத்தில் சூடுபிடித்துள்ளது.
View this post on Instagram
