திருப்பத்தூர் மாவட்டம் வட்டாட்சியர் அலுவலகத்தில், மனு கொடுக்க வந்த ஒரு ஏழைப் பெண்ணை அதிகாரி ஒருவர் தரக்குறைவாகப் பேசிய சம்பவம் பொதுமக்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. மாற்றுத்திறனாளியான தனது கணவருடன் உதவி கோரி வந்த அந்தப் பெண்ணிடம், அங்கிருந்த அதிகாரி ஒருவர் குறைகளைக் கேட்பதற்குப் பதிலாக, “ஏன் 3 பிள்ளைகளைப் பெற்றுக் கொண்டாய்?” எனத் தனிப்பட்ட முறையில் மிகவும் நாகரிகமற்ற முறையில் கேள்வி எழுப்பியுள்ளார். அதிகாரியின் இந்த அடாவடிப் பேச்சால் மனவேதனையடைந்த அந்தப் பெண், தன்னை அவமதித்த அதிகாரி மீது நடவடிக்கை எடுக்கக் கோரி வட்டாட்சியரிடம் கண்ணீருடன் புகார் அளித்துள்ளார்.
“தேவையில்லாம ஏன் 3 பிள்ளைகள பெத்துக்கிட்ட ?…” மனு கொடுக்க வந்த மாற்றுத்திறனாளியின் மனைவியிடம் தரக் குறைவாக கேள்வியெழுப்பிய அதிகாரி… பாதிக்கப்பட்டவர் வட்டாட்சியரிடம் புகார்#Tirupattur #disabledperson #Officer #Newstamil #NewsTamil24x7 pic.twitter.com/gXBCG9fO8g
— News Tamil 24×7 (@NewsTamilTV24x7) February 14, 2026
அரசு அலுவலகங்களுக்கு உதவி தேடி வரும் பொதுமக்களைக் கண்ணியத்துடன் நடத்த வேண்டிய அதிகாரிகளே, இப்படி அவர்களின் வறுமையையும் தனிப்பட்ட வாழ்க்கையையும் கிண்டல் செய்வது அதிகார மிரட்டலின் உச்சமாகப் பார்க்கப்படுகிறது. இந்தச் சம்பவம் தொடர்பான தகவல் சமூக வலைதளங்களில் பரவியதையடுத்து, சம்பந்தப்பட்ட அதிகாரி மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனப் பலரும் வலியுறுத்தி வருகின்றனர். ஏழை எளிய மக்களின் உணர்வுகளோடு விளையாடும் இதுபோன்ற அதிகாரிகளின் போக்கு, அரசு நிர்வாகத்தின் மீதான நம்பிக்கையையே கேள்விக்குறியாக்கியுள்ளது.
