உலகையே தனது கைக்குள் வைத்திருக்கும் அமெரிக்காவின் பெரும் கோடீஸ்வரர்கள் கூட, தற்போது தங்களது பிள்ளைகளின் வேலைவாய்ப்பு மற்றும் எதிர்காலத்தை எண்ணி நடுத்தர வர்க்க குடும்பங்களைப் போலவே கவலைப்படத் தொடங்கியுள்ளனர். இதற்கு முக்கியக் காரணமாக உருவெடுத்துள்ளது
‘ஆர்டிபிஷியல் இன்டெலிஜென்ஸ்’ எனப்படும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம். தொழில்நுட்பம், சட்டம் மற்றும் மருத்துவம் போன்ற பாரம்பரியமான மற்றும் பாதுகாப்பான துறைகளில் கூட, தொடக்கநிலை வேலைகளை (Entry-level jobs) ஏஐ ஆக்கிரமித்து வருவதால், கோடீஸ்வர வீட்டுப் பிள்ளைகளுக்கும் இனி வேலை கிடைப்பது குதிரைக்கொம்பாகிவிடும் என சொத்து மேலாண்மை நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
வெறும் பணத்தை மட்டும் வாரி வழங்குவது ஒரு தீர்வாகாது என்றும், 30 வயதைக் கடந்த பிறகு கூட ஒருவருக்கு புதிய திறமைகளை கற்க வேண்டிய கட்டாயம் (Retraining) ஏற்படும் என்றும் அவர்கள் கூறுகின்றனர். போதிய சொத்துக்கள் இருந்தாலும், ஒரு வேலையில் சேர்வதன் மூலம் கிடைக்கும் தன்னம்பிக்கை, அடையாளம் மற்றும் குறிக்கோள் சிதைந்துவிடுமோ என்பதே இந்த பில்லியனர் பெற்றோர்களின் பெரும் கவலையாக உள்ளது.
இதனால், தங்கள் பிள்ளைகளை பெரிய நிறுவனங்களில் வேலைக்கு அனுப்பாமல், சிறிய தொழில்களைத் தொடங்கி அதில் ஏஐ தொழில்நுட்பத்தைப் புகுத்தி வெற்றிபெறச் செய்ய அவர்கள் திட்டமிட்டு வருகின்றனர்.
2025-ஆம் ஆண்டில் பட்டதாரிகளுக்கான வேலைவாய்ப்பு மிகக் குறைந்த அளவிலேயே இருந்ததும், வேலையில்லாத் திண்டாட்டம் 9.7 சதவீதமாக உயர்ந்திருப்பதும் இந்த கவலையை மேலும் உறுதிப்படுத்தியுள்ளது.
