இந்தோனேசியாவின் சுலவேசி தீவில் உள்ள மரோஸ் பகுதியில், 7.22 மீட்டர் நீளமும் 96.5 கிலோ எடையும் கொண்ட “இபு பரோன்” என்ற ராட்சத பெண் மலைப்பாம்பு கண்டுபிடிக்கப்பட்டு கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்துள்ளது.

ரெட்டிகுலேட்டட் வகையைச் சேர்ந்த இந்த மலைப்பாம்புகள் பொதுவாக 3 முதல் 6 மீட்டர் வரை மட்டுமே வளரும் என்பதால், 20 அடிக்கும் அதிகமான நீளம் கொண்ட இபு பரோன் மிகவும் அரிதான ஒன்றாகக் கருதப்படுகிறது.

ஒருவேளை இதற்கு மயக்க மருந்து கொடுத்து உடல் முழுமையாக ஓய்வெடுக்கும் நிலையில் அளந்திருந்தால், இதன் நீளம் 7.9 மீட்டர் (26 அடி) வரை இருந்திருக்கக்கூடும் என கின்னஸ் அமைப்பு தெரிவித்துள்ளது.

இந்த வகை மலைப்பாம்புகள் விஷமற்றவை என்றாலும், அவற்றின் பிரம்மாண்டமான உடல் வலிமையால் கால்நடைகளையும், அரிதான நேரங்களில் மனிதர்களையும் கூட கொல்லும் திறன் கொண்டவை.

இபு பரோனின் நீளத்தை அதிகாரிகள் உறுதி செய்த பிறகு, அதற்கு எந்தக் காயமும் ஏற்படாமல் மீண்டும் அடர்ந்த காட்டுப்பகுதியிலேயே பாதுகாப்பாக விட்டனர்.

இருப்பினும், அந்தப் பகுதியில் இவ்வளவு பெரிய மலைப்பாம்புகள் நடமாடுவதுமனிதர்களுக்கும் கால்நடைகளுக்கும் அச்சுறுத்தலாக இருப்பதாகக் கின்னஸ் அமைப்பு எச்சரித்துள்ளது.