நாடாளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத்தொடரில் ஆளும் மற்றும் எதிர்க்கட்சிகளிடையே கடும் மோதல் நிலவி வரும் சூழலில், காங்கிரஸ் எம்.பி.க்கள் சபாநாயகர் ஓம் பிர்லாவின் அறைக்குள் நுழைந்து அவரை மிரட்டியதாக மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு புதிய குற்றச்சாட்டினை முன்வைத்துள்ளார்.
கடந்த 4-ஆம் தேதி பிரதமர் உரையாற்ற இருந்தபோது ஏற்பட்ட அமளியைத் தொடர்ந்து, பாதுகாப்பு காரணங்களுக்காக அவரை அவைக்கு வரவேண்டாம் எனச் சபாநாயகர் கேட்டுக்கொண்டதாகத் தகவல் வெளியானது. இதனை மறுத்த காங்கிரஸ் எம்.பி. பிரியங்கா காந்தி, பிரதமர் கேள்விகளுக்குப் பதிலளிக்கப் பயந்து சபாநாயகர் பின்னால் ஒளிந்துகொள்வதாக விமர்சித்திருந்தார்.
This is the illegal video clip taken by a Congress MP when 20-25 Congress MPs entered the Chamber of Hon’ble Speaker, abused him and threatened Honb’le Prime Minister. Our party believes in debate & discussion and never encourage MPs to threaten physically. https://t.co/bezzALc7D3 pic.twitter.com/iM0a50Z4rg
— Kiren Rijiju (@KirenRijiju) February 12, 2026
இந்நிலையில், சபாநாயகர் அறைக்குள் 20-க்கும் மேற்பட்ட காங்கிரஸ் எம்.பி.க்கள் நுழைந்து அவரை அவதூறாகப் பேசியதாகக் கூறப்படும் வீடியோவை அமைச்சர் கிரண் ரிஜிஜு வெளியிட்டுப் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.
இந்தச் சம்பவத்தின் போது பிரியங்கா காந்தி மற்றும் கே.சி. வேணுகோபால் ஆகியோர் உடனிருந்ததாகவும், அவர்கள் நேரடியாகச் சபாநாயகரைத் திட்டவில்லை என்றாலும் மற்றவர்களின் அநாகரிகச் செயல்களை ஊக்குவித்ததாகவும் அமைச்சர் குற்றம் சாட்டியுள்ளார். சீனாவுடனான எல்லை மோதல் குறித்த முன்னாள் ராணுவ தளபதியின் புத்தகத்தைக் குறிப்பிட்டு ராகுல் காந்தி பேச அனுமதி மறுக்கப்பட்டதால் ஏற்பட்ட ஆத்திரத்தில் இந்தச் சம்பவம் நடந்ததாகத் தெரிகிறது.
இதனிடையே, சபாநாயகர் ஓம் பிர்லா நடுநிலையோடு செயல்படவில்லை எனக் கூறி, அவரைப் பதவியிலிருந்து நீக்கக் கோரி எதிர்க்கட்சிகள் தீர்மான நோட்டீஸ் அளித்துள்ளன. இந்த விவகாரத்தால் நாடாளுமன்ற வளாகத்தில் பெரும் அரசியல் பதற்றம் நிலவி வருகிறது.
