தமிழக பாஜகவின் முன்னாள் தலைவர் அண்ணாமலை, திருப்பூரில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கேசவ விநாயகம் பாஜக பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டது குறித்து விளக்கம் அளித்தார். கேசவ விநாயகம் ஒரு ஆர்.எஸ்.எஸ் பிரச்சாரக் என்றும், அவர் ஒரு அரசியல்வாதி கிடையாது என்றும் அண்ணாமலை குறிப்பிட்டார்.

கட்சி மேலிடம் அவருக்கு கொடுத்த வேலையைச் சிறப்பாக முடித்துவிட்டு, தற்போது மீண்டும் ஆர்.எஸ்.எஸ் இயக்கத்திற்கே அவர் திரும்பியுள்ளதாகவும், அவருக்கு அங்கு முக்கிய பொறுப்பு வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

கேரளா, கர்நாடகா போன்ற மாநிலங்களிலும் இந்தப் பதவி காலியாகவே இருப்பதால், இதில் சர்ச்சைக்கு இடமில்லை என அவர் தெளிவுபடுத்தினார்.

முன்னதாக சென்னையில் நடந்த பாஜக மையக்குழு கூட்டத்தில், அண்ணாமலை மற்றும் கேசவ விநாயகம் ஆதரவாளர்களிடையே கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டதாகவும், அதன் முடிவிலேயே கேசவ விநாயகம் மாற்றப்பட்டதாகவும் தகவல்கள் பரவின.

இது குறித்துப் பேசிய அண்ணாமலை, தமக்கும் நயினார் நாகேந்திரனுக்கும் இடையே எந்தப் பனிப்போரும் இல்லை என்றும், தனக்கு வழங்கப்பட்ட பணிகளைத் தொடர்ந்து செய்து வருவதாகவும் கூறினார்.

உட்கட்சிப் பூசல்கள் குறித்து வெளியான செய்திகளை மறுத்த அவர், இது ஒரு வழக்கமான நடைமுறைதான் என்பதை வலியுறுத்தினார்.