நடிகர் விஜய் தொடங்கிய தமிழக வெற்றி கழகத்தில் (தவெக) இணைந்திருந்த பாரத மக்கள் முன்னேற்றக் கழகத்தின் (பாமமுக) நிர்வாகிகள், தற்போது அக்கட்சியிலிருந்து விலகி மீண்டும் தங்களது பழைய கட்சிக்கே திரும்புவதாக அறிவித்துள்ளனர். இது அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

இது தொடர்பாக பாமமுக மாநிலத் தலைவர் மற்றும் பொதுச்செயலாளர் G.R.S. கோல்டு R. செந்தில்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: மக்கள் சேவையைத் தொடரும் நோக்கில், கடந்த ஆண்டு எங்களது பாரத மக்கள் முன்னேற்றக் கழகத்தை தமிழக வெற்றி கழகத்துடன் இணைத்தோம்.

இருப்பினும், தவெக-வின் தற்போதைய செயல்பாடுகள் மற்றும் அணுகுமுறைகளில் எங்களுக்குச் சற்றும் திருப்தி ஏற்படவில்லை. அங்கு தொடர்ந்து சுதந்திரமாக மக்கள் பணியாற்றுவதில் பல்வேறு நடைமுறைச் சிக்கல்கள் நீடிக்கின்றன.

இந்தச் சூழலில், தமிழக வெற்றி கழகத்திலிருந்து முற்றிலும் விலகி, மீண்டும் எங்களது தாய் கட்சியான பாரத மக்கள் முன்னேற்றக் கழகத்தின் (பாமமுக) பெயரிலேயே மக்கள் பணிகளைத் தொடர முடிவெடுத்துள்ளோம். எங்களது இந்த மறுவருகைத் தருணத்தைப் பத்திரிகை நண்பர்கள் மற்றும் பொதுமக்கள் வாயிலாக மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம் என்றார்.

மேலும் தவெக தொடங்கப்பட்ட குறுகிய காலத்திலேயே, இணைந்த ஒரு கட்சி மீண்டும் விலகிச் செல்வது இணையதளங்களில் விவாதப் பொருளாக மாறியுள்ளது.