ராஜஸ்தான் மாநிலம் உதயப்பூரில் உள்ள புகழ்பெற்ற ஸ்ரீநாத்ஜி கோயிலுக்குச் சென்றுவிட்டுத் திரும்பியபோது, அதிவேகமாக வந்த கண்டெய்னர் லாரி மோதியதில் உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த தாய் பரிதாபமாக உயிரிழந்தார். அதாவது உத்தரப்பிரதேச மாநிலம் மீரட்டைச் சேர்ந்த அனிதா யாதவ் (55), தனது மகள் நிதியுடன் மேவார் பகுதியில் உள்ள ஸ்ரீநாத்ஜி கோயிலுக்குத் தரிசனம் செய்ய வந்திருந்தார். திங்கள்கிழமை மதியம் தரிசனத்தை முடித்துவிட்டு நெடுஞ்சாலையை அவர்கள் கடக்க முயன்றனர்.
அப்போது அந்த வழியாக அதிவேகமாக வந்த ஒரு லாரி, அனிதா மீது பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே அனிதா உயிரிழந்தார். லாரி மோதிய வேகத்தில் அனிதாவின் உடல் சுமார் 50 மீட்டர் தூரம் இழுத்துச் செல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது.
தனது கண்முன்னேயே தாய் ரத்த வெள்ளத்தில் கிடப்பதைக் கண்டு மகள் நிதி நிலைகுலைந்து போனார். “அம்மா… ஒருமுறை எழுந்திருங்கள்…” எனக் கூறி அவர் தாயின் உடலைத் தழுவிக்கொண்டு கதறி அழுதது அங்கிருந்தோரைச் சோகத்தில் ஆழ்த்தியது. மகிழ்ச்சியுடன் கோயிலுக்கு வந்த இடத்தில், தாயைப் பறி கொடுத்த மகளின் அவலக்குரல் அந்தப் பகுதியையே உலுக்கியது.
மேலும் விபத்தை ஏற்படுத்திய லாரி ஓட்டுநர் வாகனத்தை நிறுத்தாமல் தப்பியோடிவிட்டார். தகவலறிந்து வந்த போலீசார் அனிதாவின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்துப் போலீசார் வழக்குப்பதிவு செய்து, அந்தப் பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா (CCTV) காட்சிகளை ஆய்வு செய்து வருகின்றனர். தப்பியோடிய லாரி ஓட்டுநரைத் தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
