நோய்டா முதல் டெல்லி வரை பைக் ஓட்டுபவர்கள் அதிக சத்தம் எழுப்பும் ‘ஹை-பிரஷர்’ ஹார்ன்களைப் பயன்படுத்தி பொதுமக்களை அச்சுறுத்துவது வாடிக்கையாகிவிட்டது. ஆனால், ராஜஸ்தான் மாநிலம் ஹனுமன்கார் பகுதியில் ஒரு இளைஞர் தனது ஸ்பிளெண்டர் பைக்கில் ரயிலில் பயன்படுத்தப்படும் ‘சதாப்தி எக்ஸ்பிரஸ்’ ஹார்னைப் பொருத்தி வலம் வந்துள்ளார். இதைக் கவனித்த சர்க்கிள் இன்ஸ்பெக்டர் அனில் சந்தா, அந்த பைக்கை மறித்து சோதனையிட்டார். அப்போது ஹார்ன் மட்டுமல்லாமல், பெரிய டயர் போடுவதற்காக நம்பர் பிளேட்டை அகற்றியது மற்றும் போலீஸ் வாகனங்களில் இருக்கும் சிவப்பு, நீல நிற விளக்குகளைப் பயன்படுத்தியது என அந்த பைக்கே ‘மாடிஃபைடு’ செய்யப்பட்டு இருப்பதைப் பார்த்து இன்ஸ்பெக்டர் அதிரடி காட்டினார்.

​அந்த இளைஞரைப் பார்த்து, “ரயில்வே ஸ்டேஷன் வந்துவிட்டது தம்பி.. இறங்கு! கம்பெனி நல்ல வண்டியைத் தான் கொடுக்கிறது, நீ என்னவோ பெரிய இன்ஜினியர் மாதிரி எல்லாத்தையும் மாத்தி வச்சிருக்கே!” என்று நக்கலாகக் கேட்டு அந்த இளைஞரைத் திணற வைத்தார். மேலும், உரிய ஆவணங்கள் இல்லாததால் அந்த பைக்கை உடனடியாகப் பறிமுதல் (Seize) செய்ததோடு, போக்குவரத்து விதிமுறைகளை மீறியதற்காக ‘ஸ்பெஷல் பிரசாத்’ எனச் சொல்லி அபராதச் சீட்டையும் கையில் கொடுத்து அனுப்பினார். இன்ஸ்பெக்டர் அனில் சந்தா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்த இந்த வீடியோ, ஒரே நாளில் 35 லட்சம் பார்வைகளைக் கடந்து இணையத்தில் தீயாய் பரவி வருகிறது.