வெனிசுலாவுடனான கச்சா எண்ணெய் வர்த்தகம் மற்றும் ரஷ்யாவிடமிருந்து எண்ணெய் இறக்குமதியை நிறுத்துவது தொடர்பாக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் வெளியிட்ட கருத்துகளுக்கு இந்திய வெளியுறவு அமைச்சகம் தற்போது விளக்கம் அளித்துள்ளது.
மேலும் பிரதமர் மோடியுடனான பேச்சுவார்த்தைக்குப் பிறகு, இந்தியா ரஷ்ய எண்ணெய் கொள்முதலை நிறுத்திவிட்டு அமெரிக்கா மற்றும் வெனிசுலாவிடமிருந்து அதிக எண்ணெய் வாங்க ஒப்புக்கொண்டதாக டிரம்ப் தனது சமூக வலைத்தளப் பதிவில் குறிப்பிட்டிருந்தார். இது சர்வதேச அளவில் பெரும் விவாதத்தை ஏற்படுத்திய நிலையில், இந்தியாவின் எரிசக்தி பாதுகாப்பு குறித்த நிலைப்பாட்டை வெளியுறவுத்துறை தெளிவுபடுத்தியுள்ளது.
இந்த விவகாரம் குறித்துப் பேசிய வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால், இந்தியாவின் எண்ணெய் கொள்முதல் முடிவுகள் முற்றிலும் நாட்டின் எரிசக்தி பாதுகாப்பு மற்றும் 140 கோடி மக்களின் நலனை அடிப்படையாகக் கொண்டவை என்று தெரிவித்தார்.
எந்த ஒரு குறிப்பிட்ட நாட்டின் அழுத்தத்திற்கும் இடம் கொடுக்காமல், இந்தியாவின் ஸ்திரத்தன்மைக்குத் தேவையான இடங்களிலிருந்து எண்ணெய் இறக்குமதி செய்யப்படும் என்று அவர் குறிப்பிட்டார். இதன் மூலம், கச்சா எண்ணெய் வர்த்தகத்தில் இந்தியா தனது தேசிய நலனுக்கே முன்னுரிமை அளிக்கும் என்பதை வெளியுறவு அமைச்சகம் உறுதிப்படுத்தியுள்ளது.
