தமிழ் திரையுலகில் ஒரு காலத்தில் மிரட்டலான வில்லனாக வலம் வந்த நடிகர் பொன்னம்பலம், தற்போது உடல்நலக்குறைவு காரணமாக நடக்கக்கூட முடியாமல் சக்கர நாற்காலியில் அமர்ந்திருக்கும் நிலை அவரது ரசிகர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

 

சண்டைக் கலைஞராகத் தனது திரையுலக வாழ்க்கையைத் தொடங்கிய இவர், நாட்டாமை திரைப்படத்தில் நடித்த பொன்னம்பலம் கதாபாத்திரம் மூலம் புகழின் உச்சத்துக்கே சென்றார். ரஜினிகாந்த், கமல்ஹாசன், சரத்குமார் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுக்கு வில்லனாகப் பல படங்களில் நடித்தவர், கடந்த சில ஆண்டுகளாகச் சிறுநீரகக் கோளாறு காரணமாகத் திரையில் தோன்றுவதைத் தவிர்த்து வந்தார்.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றதன் மூலம் அவரது தனிப்பட்ட வாழ்க்கை மற்றும் கஷ்டங்கள் வெளியுலகிற்குத் தெரிய வந்தன. சிறுநீரகக் கோளாறு தீவிரமடைந்த நிலையில், மருத்துவச் செலவுகளுக்குப் பொருளாதார ரீதியாகச் சிரமப்பட்ட அவருக்கு நடிகர் சிரஞ்சீவி, கமல்ஹாசன், தனுஷ் உள்ளிட்ட திரைத்துறையினர் உதவிக்கரம் நீட்டினர்.

தீவிர சிகிச்சைக்குப் பின் வீடு திரும்பினாலும், தற்போது வாரத்திற்கு மூன்று முறை டயாலிசிஸ் சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில், சமீபத்தில் நடைபெற்ற ஒரு துக்க நிகழ்வில் அவர் சக்கர நாற்காலியில் அமர்ந்தபடி கலந்துகொண்ட காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகின்றன.

ஒரு காலத்தில் திரையில் பறந்து சண்டை போட்ட நடிகர், இன்று தனது அன்றாடத் தேவைகளுக்காகச் சக்கர நாற்காலியைச் சார்ந்து இருக்கும் நிலை பலரையும் வேதனையில் ஆழ்த்தியுள்ளது.