தமிழக அரசியல் களத்தில் வரவிருக்கும் சட்டப்பேரவைத் தேர்தல் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், தமிழக வெற்றிக் கழகம் (த.வெ.க) வீசியுள்ள ‘ஆட்சியில் பங்கு’ என்ற வலை, நீண்டகாலக் கூட்டணிக் கணக்குகளை மாற்றியமைக்கத் தொடங்கியுள்ளது.

கட்சி தொடங்கப்பட்டு 2 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில், முதல் தேர்தலிலேயே முத்திரை பதிக்கத் துடிக்கிறார் த.வெ.க. தலைவர் விஜய். விக்கிரவாண்டி மாநாட்டில் அவர் அறிவித்த “கூட்டணி கட்சிகளுக்கு ஆட்சியில் பங்கு” என்ற அறிவிப்பு, தமிழக அரசியல் வரலாற்றில் இதுவரை இல்லாத ஒரு திருப்பமாகப் பார்க்கப்படுகிறது. திராவிடக் கட்சிகள் அரை நூற்றாண்டு காலமாகத் தவிர்த்து வந்த இந்த ‘பவர் ஷேரிங்’ முறையை விஜய் கையில் எடுத்துள்ளார்.

விஜய்யின் இந்த அறிவிப்பைச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ள காங்கிரஸ் திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது. வரும் தேர்தலில் தி.மு.க-விடம் காங்கிரஸ் தரப்பில் முன்வைக்கப்பட்டுள்ள கோரிக்கைகள் அரசியல் வட்டாரத்தை அதிரவைத்துள்ளன: அதன்படி

ஆட்சியில் பங்கு.

41 சட்டப்பேரவைத் தொகுதிகள்.

2 மாநிலங்களவை (Rajya Sabha) இடங்கள்.

உள்ளாட்சித் தேர்தலில் 20 சதவீத இட ஒதுக்கீடு.

கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் 9 இடங்களில் வென்றாலும், அக்கட்சியின் வாக்கு சதவீதம் (10.68%), ஒரு இடத்தில் கூட வெற்றி பெறாத பா.ஜ.க-வின் வாக்கு சதவீதத்தை (11.24%) விடக் குறைவாக இருப்பதைச் சுட்டிக்காட்டி, கட்சியை வலுப்படுத்த இக்கோரிக்கைகள் எழுப்பப்பட்டுள்ளன.

தி.மு.க கூட்டணியில் இன்னும் தொகுதிப் பங்கீட்டுக் குழு அழைக்கப்படாததால் காங்கிரஸ் நிர்வாகிகள் விரக்தியில் உள்ளனர். இதற்கிடையே, த.வெ.க தரப்பு காங்கிரஸுக்கு வாரி வழங்கத் தயாராக இருப்பதாகக் கூறப்படுகிறது: குறிப்பாக,

70 தொகுதிகள்.

1 துணை முதல்வர் பதவி மற்றும் 6 அமைச்சர் பதவிகள்.

2029 நாடாளுமன்றத் தேர்தலில் 28 தொகுதிகள்.

ஏற்கனவே ராகுல் காந்தி தொலைபேசி வாயிலாகவும், மூத்த நிர்வாகி பிரவீன் சக்கரவர்த்தி நேரடியாகவும் விஜய்யுடன் பேசியுள்ள நிலையில், இந்த ‘மெகா ஆபர்’ குறித்து காங்கிரஸ் மேலிடம் தீவிரமாகப் பரிசீலித்து வருவதாகத் தெரிகிறது.

காங்கிரஸ் பொதுச்செயலாளர் கே.சி. வேணுகோபாலின் தமிழக வருகை தள்ளிப்போகும் நிலையில், டெல்லியில் இருந்து வரும் மேலிடத் தலைவர்கள் நேரடியாக விஜய்யைச் சந்திக்கவும் வாய்ப்புள்ளதாகப் பரபரப்பு நிலவுகிறது. இது நடந்தால், தமிழகக் கூட்டணிக் கணக்குகளில் பெரும் மாற்றம் ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் அதே நேரத்தில் தற்போது வரை காங்கிரஸ் மற்றும் திமுக கூட்டணிகள் உறுதி என்று அக்கட்சியின் தலைவர்கள் கூறி வருவது குறிப்பிடத்தக்கது.