தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், தமிழக அரசு மற்றும் தவெக தலைவர் விஜய் ஆகியோரை கடுமையாக விமர்சித்தார். மத்திய அரசு தமிழகத்திற்கு மருத்துவக் கல்லூரிகள், விமான நிலைய விரிவாக்கம், இலவச ரேஷன் பொருட்கள் எனப் பல திட்டங்களை வழங்கினாலும், திமுக அரசு அவற்றிற்குத் தன் முத்திரையைப் பதித்து ஏமாற்றுவதாக அவர் குற்றம் சாட்டினார்.

மேலும், தேர்தல் வாக்குறுதிக்கு மாறாக சொத்து வரி மற்றும் மின்கட்டணத்தை 300 சதவீதம் உயர்த்திவிட்டு, மத்திய அரசு எதுவுமே தரவில்லை என்று முதல்வர் பொய் கூறி வருவதாகவும், நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்த பட்ஜெட்டை முழுமையாகப் படிக்காமல் விமர்சிப்பவர்கள் 2026 தேர்தலில் காணாமல் போவார்கள் என்றும் அவர் தெரிவித்தார்.

தவெக கட்சியின் மூன்றாம் ஆண்டு தொடக்க விழாவில் நடிகர் விஜய் நடனமாடியது குறித்துப் பேசிய நயினார் நாகேந்திரன், “தம்பி விஜய்க்கு அரசியல் குறித்து ஒன்றுமே தெரியாது என்று நினைக்கிறேன்” எனச் சாடினார்.

ஒரு கட்சியின் தலைவராக இருப்பவர் தமிழக கலாச்சாரம் தெரியாமல் மேடையில் நடனமாடிக் கொண்டிருப்பதாகக் குறிப்பிட்ட அவர், என்டிஏ கூட்டணியில் எந்தெந்த கட்சிகள் இருக்கின்றன என்ற அடிப்படை விவரம் கூடத் தெரியாமல் விஜய் பேசி வருவதாக விமர்சித்தார்.

மக்கள் பிரச்சனைகளைத் தெரிந்து கொள்ளாமல் நடனம் ஆடிக்கொண்டிருந்தால், அவர் எப்போதும் ஆடிக் கொண்டே இருக்க வேண்டியதுதான் என்றும் நயினார் நாகேந்திரன் காட்டமாகத் தெரிவித்தார்.