ஹிமாச்சல பிரதேசத்தின் மிகக் குறுகிய மலைப்பாதையில் நோயாளி ஒருவரை ஏற்றிக்கொண்டு ஆம்புலன்ஸ் ஒன்று விரைந்து கொண்டிருந்தது. அப்போது ஆம்புலன்ஸ் டேஷ்கேமில் (Dashcam) பதிவான காட்சிகள் பார்ப்பவர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளன.

அந்தச் சிறிய பாதையில் மற்ற மாநிலங்களைச் சேர்ந்த தனியார் வாகனங்கள் வரிசையாகத் தவறான திசையில் (Wrong Side) நுழைந்து ஆம்புலன்ஸின் வழியை மறித்துள்ளன.

ஆம்புலன்ஸ் சைரன் ஒலித்தும் கூட, எதைப் பற்றியும் கவலைப்படாமல் அவர்கள் தங்களது வாகனங்களை நகர்த்த மறுத்துள்ளனர். இதனால் உயிருக்குப் போராடும் நோயாளிக்குச் சிகிச்சை அளிக்கக் காலதாமதம் ஏற்பட்டுள்ளது.

இந்த வீடியோவை எக்ஸ் (X) தளத்தில் பதிவிட்ட பயனர் ஒருவர், டெல்லி, ஹிமாச்சல பிரதேசம் மற்றும் உத்தரப் பிரதேச போலீசாரைத் டேக் செய்து, சம்பந்தப்பட்ட வாகன எண்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கக் கோரிக்கை விடுத்துள்ளார்.

மலைப்பாதைகளில் வாகனம் ஓட்டுவதற்கு அதிக ஒழுக்கம் தேவை. ஆனால், இதுபோன்ற அலட்சியமான ஓட்டுநர்களால் எத்தனையோ உயிர்கள் பறிபோகின்றன.

“இவர்களது ஓட்டுநர் உரிமத்தை வாழ்நாள் முழுவதும் ரத்து செய்ய வேண்டும்” எனப் பொதுமக்கள் பலரும் தங்களது குமுறல்களைப் பதிவிட்டு வருகின்றனர்.