சீனாவில் சாலை விபத்து ஒன்றில் சிக்கி, மூளையில் பலத்த காயமடைந்து கோமா நிலைக்குச் சென்ற 8 வயது சிறுவன் ஷுசி, தனது ஆசிரியர்கள் மற்றும் நண்பர்களின் உதவியால் மீண்டும் இயல்பு நிலைக்குத் திரும்பியுள்ளார். ஷுசிக்கு சிகிச்சை அளித்த மருத்துவர், அவனுக்குப் பழகிய ஓசைகளைக் கேட்க வைப்பது மூளையைத் தூண்ட உதவும் என்று அறிவுரை வழங்கினார். இதைத் தொடர்ந்து, ஷுசியின் தாய் அவனது பள்ளியில் தினமும் ஒலிக்கும் பாடல்கள் மற்றும் அவனது நண்பர்களின் உரையாடல்களைப் பதிவு செய்து, மருத்துவமனையில் அவனது காதுக்கு அருகில் தினமும் ஒலிக்கச் செய்துள்ளார்.

​சுமார் 70 நாட்களாகத் தொடர்ந்து இந்த முயற்சியை மேற்கொண்ட நிலையில், மெல்ல மெல்ல அசைவுகளைக் காட்டிய ஷுசி, தற்போது முழுமையாகக் கோமா நிலையில் இருந்து மீண்டு வந்துள்ளார். தனது நண்பர்களின் குரலைக் கேட்டதும் சிறுவனின் மூளையில் ஏற்பட்ட நேர்மறையான மாற்றங்களே இந்த அதிசயத்திற்குக் காரணம் என்று கூறப்படுகிறது. தற்போது ஷுசி பழையபடி பேசவும், நடக்கவும் தொடங்கியிருப்பது அந்தத் தாய்க்கும், அவனது பள்ளி நண்பர்களுக்கும் எல்லையில்லா மகிழ்ச்சியை அளித்துள்ளது.