மூளை புற்றுநோயால் பாதிக்கப்பட்டு உயிருக்கு போராடிக் கொண்டிருந்த ஒரு ஊழியருக்கு, நிறுவனம் ஊதியத்துடன் கூடிய விடுப்பு வழங்க மறுத்த சம்பவம் சமூக வலைதளங்களில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. தனது வாழ்வின் மிகக்கடினமான சூழலில், மருத்துவச் செலவுகளுக்கும் குடும்பத் தேவைக்கும் பண உதவி தேவைப்பட்ட நேரத்தில், அந்த நிறுவனத்தின் மனிதாபிமானமற்ற அணுகுமுறை பலரையும் கண்ணீர் சிந்த வைத்துள்ளது.

மேலும் வேலையை விட உயிரும் ஆரோக்கியமும் முக்கியம் என்பதை மறந்து, லாபத்தை மட்டுமே நோக்கமாகக் கொண்டு செயல்படும் கார்ப்பரேட் கலாச்சாரத்தின் கோர முகத்தை இந்தச் சம்பவம் வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளது. இந்தத் துயரமான கதையைப் பகிர்ந்த அந்த ஊழியர், தான் நோயுடன் போராடுவதை விடவும், நிறுவனத்தின் மேலதிகாரிகளின் அலட்சியமான பதில்களால் அதிகம் காயப்பட்டதாக உருக்கமாகத் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் “உடல்நிலை சரியில்லை என்றால் ராஜினாமா செய்துவிடுங்கள்” என்ற ரீதியில் இருந்த நிர்வாகத்தின் போக்கு, சமூக வலைதளங்களில் கடும் விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது. சக மனிதனின் வலியைக் கூட உணராத இத்தகைய பணியிடச் சூழல் மாற வேண்டும் என்றும், ஊழியர்களின் அடிப்படை உரிமைகள் மற்றும் உடல்நலப் பாதுகாப்பு குறித்த சட்டங்கள் இன்னும் வலுப்படுத்தப்பட வேண்டும் என்றும் பலரும் குரல் கொடுத்து வருகின்றனர்.