வரும் 2026 சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக கூட்டணி பெருவாரியான இடங்களில் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியைப் பிடிக்கும் என அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்தார். சேலம் மாவட்டம் ஓமலூரில் வியாழக்கிழமை நடைபெற்ற மாற்றுக் கட்சியினர் அதிமுகவில் இணையும் விழாவில் பங்கேற்று அவர் பேசியதாவது:

திமுகவின் குடும்ப அரசியல் மற்றும் மக்கள் விரோதப் போக்கு குறித்து தமிழக மக்கள் இப்போது நன்றாகப் புரிந்து கொண்டுள்ளனர். அதிமுக ஆட்சியில் கடன் அதிகமாகிவிட்டது என திமுக கூறி வருவது முற்றிலும் பொய்யானத் தகவல். தங்களது நிர்வாகத் திறமையின்மையை மறைக்க இது போன்ற அவதூறுகளைப் பரப்பி வருகின்றனர்.

மக்களின் வரிப்பணத்தில் பல கோடி ரூபாயைச் செலவு செய்து திமுக அரசு விளம்பரம் தேடிக்கொள்கிறது. விளம்பரங்களால் மட்டுமே ஓர் அரசு நிலைத்துவிட முடியாது. வரும் தேர்தலில் அதிமுகவின் வெற்றியைத் தடுக்க யாராலும் முடியாது.

உதயநிதி ஸ்டாலின் முதலமைச்சராக வருவது ஒருபோதும் நடக்காத காரியம். அதற்கு மக்கள் ஒருபோதும் சம்மதிக்க மாட்டார்கள். வாரிசு அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்க மக்கள் தயாராகிவிட்டனர்.

வரும் 2026 சட்டப்பேரவைத் தேர்தல்தான் திமுக சந்திக்கப்போகும் கடைசித் தேர்தலாக இருக்கும். அந்தத் தேர்தலில் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்டி, சரியான தண்டனையைக் கொடுப்பார்கள். அதிமுகவின் எழுச்சி இப்போது தொடங்கிவிட்டது என்றார்.