மத்தியப் பிரதேச மாநிலத்தின் உஜ்ஜைன் பகுதியில் தீபாவளிக்கு அடுத்த நாள் ‘ஏகாதசி’ திருவிழாவை முன்னிட்டு ஒரு வினோதமான நேர்த்திக்கடன் நிறைவேற்றப்படுகிறது. இதில் நூற்றுக்கணக்கான மாடுகளை ஒன்றாக ஓட்டி வரப்பட்டு, தரையில் படுத்திருக்கும் பக்தர்கள் மீது பாயச் செய்கின்றனர்.

தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் வீடியோவில், சுமார் ஏழுக்கும் மேற்பட்டோர் தரையில் குப்புறப் படுத்திருக்க, அவர்கள் மேல் பத்துக்கும் மேற்பட்ட மாடுகள் வரிசையாக மிதித்துச் செல்வது போன்று காட்சிகள் உள்ளன. பார்ப்பதற்கே உடல் சிலிர்க்க வைக்கும் இந்தச் சடங்கினால் பலருக்கு எலும்பு முறிவு போன்ற பலத்த காயங்கள் ஏற்படும் அபாயம் உள்ளது.

இந்த வீடியோவைப் பார்த்த நெட்டிசன்கள், “நம்பிக்கை என்பது பலம் கொடுக்க வேண்டும், ஆனால் இதுபோன்ற மூடநம்பிக்கைகள் உயிருக்கே உலைய வைக்கும்” எனத் தங்களது கவலைகளைப் பதிவிட்டு வருகின்றனர்.

அதே சமயம், பல நூற்றாண்டுகளாகத் தங்களது முன்னோர்கள் கடைபிடித்து வரும் இந்த வழிபாட்டில் தங்களுக்குப் பெரும் நம்பிக்கை இருப்பதாக உள்ளூர் மக்கள் கூறுகின்றனர்.

எது எப்படியோ, விபரீதங்கள் நடக்கும் முன் இதுபோன்ற அபாயகரமான சடங்குகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாக உள்ளது.