மத்தியப் பிரதேச மாநிலத்தில், சொத்து மற்றும் பணத் தகராறு காரணமாக அஞ்சு பாண்டே என்ற பெண்ணை அவரது அண்டை வீட்டாரே வீட்டை விட்டு வெளியே இழுத்து வந்து கொடூரமாகத் தாக்கியுள்ளனர்.

கடந்த புதன்கிழமை நடந்த இந்தச் சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் வெளியாகிப் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.
<a href="http://

“>
அந்த வீடியோவில், ராகுல் யாதவ் என்பவர் அஞ்சு பாண்டேவின் முடியைப் பிடித்து இழுத்து வந்து சாலையில் தள்ளிவிட்டுத் தாக்குவதும், அவருடன் சேர்ந்து சுனிதா யாதவ் மற்றும் சிலர் கட்டைகளால் அப்பெண்ணை இரக்கமின்றி அடிப்பதுமான காட்சிகள் பதிவாகியுள்ளன.

சுமார் 16 லட்சம் ரூபாய் மதிப்புள்ள சொத்து விவகாரம் மற்றும் சட்டவிரோதப் பணக் கோரிக்கை தொடர்பாக இந்தத் தாக்குதல் நடந்ததாகக் கூறப்படுகிறது.

இந்தக் கொடூரத் தாக்குதலில் காயமடைந்த அஞ்சு பாண்டே, ராகுல் யாதவ், சுனிதா யாதவ் உள்ளிட்ட பலரது பெயர்களைக் குறிப்பிட்டு காவல்துறையில் புகார் அளித்துள்ளார்.

புகாரின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்துள்ள அதர்தல் போலீசார், தலைமறைவாக உள்ள குற்றவாளிகளைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

வாடகைக்கு வாகனங்கள் விட்டுப் பிழைப்பு நடத்தி வரும் அப்பெண்ணை, ஊர் மக்கள் முன்னிலையிலேயே நடுரோட்டில் வைத்துத் தாக்கிய இந்தச் சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என உள்ளூர் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.