இந்தியாவின் 77வது குடியரசு தினத்தை முன்னிட்டு மாலத்தீவு அதிபர் முகமது முய்சு தெரிவித்த வாழ்த்துகளுக்குப் பிரதமர் மோடி அந்நாட்டின் அதிகாரப்பூர்வ மொழியான திவேஹி மொழியில் எக்ஸ் தளத்தில் நன்றி தெரிவித்திருந்தார். இரு நாடுகளின் மக்கள் நலனுக்காகவும், மாலத்தீவு மக்களின் மகிழ்ச்சியான எதிர்காலத்திற்காகவும் இணைந்து பணியாற்றுவோம் என்பதே அந்தப் பதிவின் சுருக்கமாகும்.
ஆனால், இந்தப் பதிவை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த எக்ஸ் தளத்தின் குரோக் எனும் செயற்கை நுண்ணறிவு கருவி, மாலத்தீவு அரசு இந்தியாவிற்கு எதிரான பிரச்சாரங்களில் ஈடுபட்டதாகத் தவறாக மொழிபெயர்த்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. மேலும், குடியரசு தினத்திற்குப் பதிலாகச் சுதந்திர தினம் என்றும் தவறான தகவலைக் குறிப்பிட்டிருந்தது.
செயற்கை நுண்ணறிவு கருவிகள் இத்தகைய முக்கியமான ராஜீய விவகாரங்களில் தவறான தகவல்களை வழங்குவது ஆபத்தானது என இணையவாசிகள் கடுமையாக விமரிசித்து வருகின்றனர்.
ஏற்கனவே பெண்களின் படங்களை ஆபாசமாகச் சித்தரித்த புகாரில் சிக்கியுள்ள இந்தக் கருவி, தற்போது நாட்டின் பிரதமருடைய பதிவையே முற்றிலும் மாறுபட்ட அர்த்தத்தில் மொழிபெயர்த்திருப்பது அதன் நம்பகத்தன்மை குறித்த பெரும் கேள்விகளை எழுப்பியுள்ளது.
தொழில்நுட்ப வளர்ச்சியில் இத்தகைய பிழைகள் சர்வதேச உறவுகளில் சிக்கல்களை ஏற்படுத்தக்கூடும் என்பதால், ஏஐ கருவிகளைப் பயன்படுத்தும்போது மிகுந்த எச்சரிக்கை தேவை என்பதற்கு இது ஒரு சிறந்த உதாரணமாக அமைந்துள்ளது.
