மத்திய பிரதேசத்தில் குடியரசு தின விழாவை முன்னிட்டு பள்ளி மாணவர்களுக்கு தட்டுகளுக்குப் பதிலாக நோட்டுப் புத்தகக் காகிதங்களில் மதிய உணவு வழங்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மத்திய பிரதேச மாநிலம் மைஹர் மாவட்டத்தில் உள்ள பாத்திக்வான் அரசு உயர்நிலைப் பள்ளியில் இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது.
குடியரசு தினத்தை முன்னிட்டு மாணவர்களுக்குச் சிறப்பு மதிய உணவு வழங்கப்பட்டது. அப்போது மாணவர்களுக்குத் தட்டுகள் வழங்கப்படாமல், பழைய நோட்டுப் புத்தகங்கள் மற்றும் காகிதங்களில் உணவைப் பரிமாறியுள்ளனர். மாணவர்கள் காகிதங்களில் உணவை வைத்துச் சாப்பிடும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி நாடு முழுவதும் கடும் கண்டனங்களைப் பெற்று வருகிறது.
गणतंत्र दिवस के दिन बच्चों को किताबों के पन्नों पर हलवा पूरी परोसी गई ,
नया भारत , ताकतवर भारत , विश्वगुरु 🔥
📍 मैहर, मध्यप्रदेश pic.twitter.com/PqYb6VyNeo— खुरपेंच (@khurpenchh) January 27, 2026
மாணவர்களுக்குத் தட்டுகள் வாங்குவதற்காக ஏற்கனவே அரசு நிதி விடுவிக்கப்பட்டிருந்தும், பள்ளி நிர்வாகத்தின் மெத்தனத்தால் இச்சம்பவம் நடந்துள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளது. இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
இந்தச் சம்பவத்தை முன்வைத்து முதல்வர் மோகன் யாதவ் தலைமையிலான பாஜக அரசை காங்கிரஸ் கட்சி கடுமையாகச் சாடியுள்ளது. இது குறித்து அக்கட்சியின் மாநில செய்தித் தொடர்பாளர் சங்கீதா சர்மா கூறுகையில், “மாணவர்களுக்குக் காகிதத்தில் உணவு வழங்குவதுதான் உங்கள் லட்சணமா? இதுதான் நீங்கள் சொல்லும் நல்லாட்சியா?” என்று கேள்வி எழுப்பியுள்ளார். மேலும் கடந்த ஆண்டும் ஷீயோபுர் பகுதியில் இதே போன்ற ஒரு சம்பவம் அரங்கேறிய நிலையில், மீண்டும் இது போன்ற அவலம் நிகழ்ந்திருப்பது அம்மாநிலத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
