லக்னோவின் சார்வாக் ரயில் நிலையம் என்றாலே பயணிகளுக்கு ஒரு பயம் இருக்கும். எங்கே குரங்குகள் வந்து கையில் இருக்கும் பையையோ அல்லது மொபைலையோ பிடுங்கிச் செல்லுமோ என்ற அச்சத்திலேயே மக்கள் நடமாடி வந்தனர். இதற்கு முற்றுப்புள்ளி வைக்க ரயில்வே நிர்வாகம் ஒரு செம பிளான் போட்டது! லங்கூர் குரங்குகளைப் பயன்படுத்தத் தடை இருப்பதால், லங்கூர் போலவே சத்தம் போட்டு குரங்குகளை விரட்டும் ஒரு வினோதமான வேலைக்கு ஆட்களை நியமித்துள்ளனர்.
இன்ஸ்டாகிராமில் வைரலாகும் ஒரு வீடியோவில், சந்து என்ற நபர் காலை முதல் மாலை வரை சுமார் 12 மணிநேரம் லங்கூர் குரங்கு போலவே கத்தி, அங்கு வரும் குரங்குகளைப் பயமுறுத்தி ஓட வைக்கிறார். இந்தத் தனித்துவமான வேலையைப் பார்த்து நெட்டிசன்கள் “இதுதான் இந்தியாவின் மிக விசித்திரமான வேலை” என்று பாராட்டி வருகின்றனர். இதுமட்டுமில்லாமல், மெட்ரோ நிலையங்களில் லங்கூர் உருவம் கொண்ட கட்-அவுட்களையும் வைத்து குரங்குகளை ஏமாற்றி வருகின்றனர். வன்முறை இல்லாமல் அறிவைப் பயன்படுத்தி குரங்குகளை விரட்டும் இந்த முறைக்கு மக்களிடம் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது.
