பெரம்பலூர் மாவட்டம் மங்களமேடு அருகே போலீசாரைத் தாக்கிவிட்டுத் தப்பிக்க முயன்ற ரவுடி கொட்டுராஜா என்பவர் என்கவுண்டரில் சுட்டுக்கொல்லப்பட்டார். இது குறித்து மத்திய மண்டல ஐ.ஜி. பாலகிருஷ்ணன் நேரில் ஆய்வு நடத்தி விளக்கம் அளித்துள்ளார்.
கடந்த ஜனவரி 24-ஆம் தேதி, பிரபல ரவுடி ‘வெள்ளைகாளி’ என்பவரை திண்டுக்கல்லில் இருந்து சென்னைக்கு போலீசார் அழைத்துச் சென்றனர். மதிய உணவிற்காக வாகனத்தை நிறுத்தியபோது, ஒரு கும்பல் போலீசார் மீது நாட்டு வெடிகுண்டுகளை வீசித் தாக்குதல் நடத்தியது. இதில் போலீஸ் அதிகாரி ஒருவர் காயமடைந்தார். இச்சம்பவம் தொடர்பாக 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டுத் தீவிர தேடுதல் வேட்டை நடத்தப்பட்டது.
குற்றவாளிகள் ஊட்டியில் பதுங்கியிருப்பதாகக் கிடைத்த தகவலின் பேரில், அங்கு சென்ற போலீசார் சந்தேகத்திற்குரிய நபர்களைப் பிடித்து விசாரணை நடத்தினர். அதில், 3 கொலை வழக்குகள் உட்பட 5-க்கும் மேற்பட்ட வழக்குகளில் தொடர்புடைய ‘கொட்டுராஜா’ என்பவர் சிக்கினார். அவரைத் தனிப்படையினர் கைது செய்து விசாரணைக்காக அழைத்து வந்தனர்.
கைது செய்யப்பட்ட கொட்டுராஜா மறைத்து வைத்திருந்த நாட்டு வெடிகுண்டுகள் மற்றும் ஆயுதங்களை மீட்பதற்காக, மங்களமேடு சுங்கச்சாவடி அருகே உள்ள ஒரு பகுதிக்கு போலீசார் அவரை அழைத்துச் சென்றனர். அப்போது, திடீரென கொட்டுராஜா போலீஸ் வாகனத்தின் மீது நாட்டு வெடிகுண்டை வீசினார். தொடர்ந்து, சப்-இன்ஸ்பெக்டர் சங்கரை ஆயுதத்தால் தாக்கிப் படுகாயப்படுத்தினார்.
இதையடுத்து, தற்காப்பிற்காக மங்களமேடு இன்ஸ்பெக்டர் நந்தகுமார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் கொட்டுராஜா படுகாயமடைந்தார். உடனடியாக அவர் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். ஆனால், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இச்சம்பவம் குறித்து நீதித்துறை நடுவர் அறிவுறுத்தலின்படி வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.
மேலும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் சப்-இன்ஸ்பெக்டர் சங்கரை நேரில் சந்தித்த ஐ.ஜி. பாலகிருஷ்ணன், அவரது உடல்நலம் குறித்துக் கேட்டறிந்தார்.
