ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் உள்ள ‘சலாசர் பாலாஜி பீணி உத்யோக்’ என்ற தொழிற்சாலையில், பீணி இனிப்புத் தயாரிப்பதற்கான மைதாவை ஒரு ஊழியர் தனது அழுக்குக் கால்களால் போட்டு மிதித்துக் கொண்டிருக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மக்கள் மிகவும் விரும்பி உண்ணும் இந்த இனிப்பு வகையை, இவ்வளவு சுகாதாரமற்ற முறையில், கால்களால் மிதித்துத் தயாரிப்பதைப் பார்த்த பொதுமக்கள் கடும் ஆத்திரமடைந்துள்ளனர். “சுவைக்காகவும், பாரம்பரியத்திற்காகவும் நாங்கள் வாங்கும் உணவில் இப்படி ஒரு அநாகரீகமா?” என்று ஜோத்பூர் மக்கள் கொந்தளித்து வருகின்றனர்.

​இந்த வீடியோ வைரலானதைத் தொடர்ந்து, சுகாதாரத் துறை அதிகாரிகள் அந்தத் தொழிற்சாலையில் அதிரடி சோதனை நடத்தினர். அங்கு சுமார் 110 கிலோ பீணி இனிப்புகள் பறிமுதல் செய்யப்பட்டு, அதன் மீது பினைல் ஊற்றி அதிகாரிகளால் அழிக்கப்பட்டது. மேலும், அங்கிருந்த நெய் மற்றும் மைதா மாதிரிகள் ஆய்வகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளன. அந்தத் தொழிற்சாலையின் உரிமத்தை ரத்து செய்யவும், அதன் மீது கடும் சட்ட நடவடிக்கை எடுக்கவும் அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். “சுவை என்ற பெயரில் மக்களின் ஆரோக்கியத்தோடு விளையாடுபவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது கருணையின்றி நடவடிக்கை எடுக்கப்படும்” என்று அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.