தமிழக காங்கிரஸ் கட்சியின் 71 மாவட்டங்களுக்கான புதிய தலைவர்களைத் தேசிய தலைமை அதிரடியாக அறிவித்துள்ளது. இதில் 68 புதிய முகங்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதுடன், முதல் முறையாக 4 பெண் மாவட்டத் தலைவர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
மூத்த தலைவர்களின் எதிர்ப்பையும் மீறி மேற்கொள்ளப்பட்டுள்ள இந்த மாற்றத்தில், டில்லி பாபு, எல்.ரெக்ஸ் உள்ளிட்ட 7 பழைய தலைவர்களுக்கு மட்டுமே மீண்டும் வாய்ப்பு கிடைத்துள்ளது.
குறிப்பாக, மாநிலத் தலைவர் செல்வப்பெருந்தகைக்கு எதிரானவர்கள் நீக்கப்பட்டு, ப.சிதம்பரத்தின் ஆதரவாளர்கள் அதிகளவில் நியமிக்கப்பட்டுள்ளதாகப் பேசப்படுகிறது. அதேநேரம், பணப்பேரப் புகார்கள் எழுந்ததால் கன்னியாகுமரி மாவட்டத்தின் 3 தலைவர்கள் நியமனம் மட்டும் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே, புதிய தலைவர்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ள காங்கிரஸ் நிர்வாகி பிரவீண் சக்கரவர்த்தி, நிர்வாகிகள் எந்தக் கட்சிக்கும் அடிபணியாமல் சுயமரியாதையுடனும் தன்னாபிமானத்துடனும் செயல்பட வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளார்.
ஒவ்வொரு மாவட்டத்திலும் காங்கிரஸின் உண்மையான அடிமட்ட பலத்தை நிரூபிக்க வேண்டியது புதிய தலைவர்களின் கடமை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஏற்கனவே திமுக கூட்டணி குறித்து அவர் தெரிவித்திருந்த கருத்துக்கள் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்த நிலையில், தற்போது ‘சுயமரியாதை’ குறித்து அவர் பதிவிட்டுள்ளது அரசியல் வட்டாரத்தில் பெரும் பேசுபொருளாகியுள்ளது.
