வீடுகளில் வளர்க்கப்படும் நாய்கள் தங்களுக்கு என ஒதுக்கப்பட்ட மென்மையான படுக்கைகளைத் தவிர்த்துவிட்டு, அடிக்கடி கதவுகளின் அருகிலோ அல்லது நுழைவு வாயில்களிலோ படுத்து உறங்குவதைப் பலரும் கவனித்திருக்கலாம். இது குறித்து கால்நடை மருத்துவர்கள் கூறுகையில், நாய்களின் இந்தச் செயல் அவற்றின் இயற்கையான உள்ளுணர்வோடு தொடர்புடையது என விளக்குகின்றனர்.

காடுகளில் வசித்த நாய்களின் முன்னோர்கள், ஆபத்துகளைக் கண்டறியவும் தங்கள் கூட்டத்தைப் பாதுகாக்கவும் குகைகளின் நுழைவு வாயிலிலேயே தங்குவதை வழக்கமாகக் கொண்டிருந்தனர். அதே மரபணுத் தொடர்ச்சியாக, தற்போதைய செல்லப் பிராணிகளும் வீட்டின் நுழைவு வாயிலில் படுத்துத் தங்கள் எல்லைக்குள் யார் வருகிறார்கள் என்பதை உணர்வதற்கும், குடும்பத்தைப் பாதுகாக்கும் பொறுப்பைத் தாங்களாகவே ஏற்றுக்கொள்வதற்கும் இவ்வாறு செயல்படுகின்றன.

இருப்பினும், நாய்களின் இத்தகைய பழக்கம் எப்போதும் பாதுகாப்பிற்கானது மட்டும் அல்ல; சில நேரங்களில் இது பதற்றம் அல்லது பிரிவாற்றாமை போன்ற மனநலப் பாதிப்புகளின் அறிகுறியாகவும் இருக்கலாம். குறிப்பாக, ஒரு நாய் வாசலிலேயே படுத்துக்கொண்டு தூக்கமின்றி அலைபாய்வது அல்லது மிகச் சிறிய சத்தத்திற்கும் அதிப்படியாக எதிர்வினையாற்றுவது போன்றவை கவலைக்குரியவை.

இதுபோன்ற நேரங்களில் உரிமையாளர்கள் நாய்களைக் கட்டாயப்படுத்தி இடமாற்றம் செய்யாமல், அமைதியான இடத்தில் அவற்றிற்குப் பிடித்த படுக்கைகளை அமைத்துக் கொடுத்து, அன்புடனும் பரிசோடும் மெதுவாகப் பழக்கப்படுத்த வேண்டும். நாய்களின் உடல் மொழியையும் தினசரி நடவடிக்கைகளையும் கவனிப்பதன் மூலம், அவை பாதுகாப்பிற்காக வாசலில் படுக்கின்றனவா அல்லது பயத்தினால் அப்படிச் செய்கின்றனவா என்பதைப் புரிந்துகொண்டு அதற்கேற்பச் செயல்பட வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர்.